வெயில் வாட்டும் தமிழகம்… வானிலை மையத்தின் முக்கிய அறிவிப்பு!!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என்றும், ஜூலை 17-ஆம் தேதி வரை 17 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை வெப்ப அலை நீடிக்கும். அதேபோல் சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களிலும் வெப்ப அலை நிலவும். இதில் நாமக்கல், கரூர், ஈரோடு, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் வரையும் வெப்ப அலை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நேற்று இந்தியாவிலேயே அதிகபட்சமாக மதுரையில் 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியிருந்தது. இதனால் பொதுமக்கள் மதிய நேரங்களில் தேவையற்ற வெளிப்புறப் பயணங்களைத் தவிர்க்கவும், போதுமான அளவு தண்ணீர் அருந்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் வெப்பம் அதிகரித்ததற்கான காரணம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய மண்டல இயக்குநர் வி.ஆர். துரை விளக்கம் அளித்துள்ளார். தென்மேற்கு பருவமழை தற்போது பலவீனமாக இருப்பதும், பூமத்திய ரேகையைத் தாண்டி வீசும் தென்மேற்குக் காற்றின் வலிமை குறைந்திருப்பதும், அரபிக்கடலில் இருந்து ஈரப்பதம் குறைவாக வருவதும், எல் நினோ தாக்கமும் இதற்கு முக்கிய காரணங்கள் என தெரிவித்துள்ளார். இதனால் மேக உருவாக்கம் குறைந்து, சூரியக் கதிர்வீச்சு நேரடியாக தரையை அடைவதால் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக கூறினார்.

வரும் 17-ஆம் தேதி முதல் கீழ்மட்ட ஜெட் காற்று படிப்படியாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை அதிகரிப்பால் வெப்பநிலை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News