ரூ.2,500 உரிமைத்தொகை கிடைக்குமா? முதல் பட்ஜெட்டில் முதல்வர் விஜயின் ‘Big Gift’ என்ன ?

தமிழக சட்டசபையில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக வெற்றி கழக அரசின் முதல் பட்ஜெட், ஒரு சிறப்பான பட்ஜெட்டாக இருக்குமா என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, கடந்த மே மாதம் பொறுப்பேற்ற முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் இந்த முதல் நிதிநிலை அறிக்கை, தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட கவர்ச்சிகரமான மற்றும் ஆக்கபூர்வமான வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரு முக்கிய கருவியாகப் பார்க்கப்படுகிறது.

அனேகமாக வரும் ஜூலை 28-ஆம் தேதியோ அல்லது ஆகஸ்ட் 3-ஆம் தேதியோ இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தொடரின் முதல் நாளில், 2026-27-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்ய உள்ளார்.

அதனைத் தொடர்ந்து, மறுநாளே வேளாண் துறை அமைச்சர் வினோத் அவர்கள் தமிழகத்தின் தனித்துவமான வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய இருக்கிறார். சுமார் ஒன்றரை மாதங்கள் நடைபெறவுள்ள இந்தத் தொடரில், துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களும், அமைச்சர்களின் பதிலுரைகளும் இடம்பெற உள்ளன. புதிய ஆட்சி என்பதால், மாநிலத்தின் நிதி நிலையைச் சீரமைக்கும் அதே வேளையில், ஏழை எளிய மக்களின் நலன்களுக்கான புதிய அறிவிப்புகள் இதில் இடம்பிடிக்கும் எனத் தெரிகிறது.

குறிப்பாக, டிவிகே கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த மெகா வாக்குறுதிகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறுமா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,500 ரூபாய் உரிமைத்தொகை, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள், திருமண உதவித் திட்டத்தின் கீழ் 1 சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை போன்ற திட்டங்கள் குறித்து இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

அதேபோல், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் 4,000 ரூபாய் உதவித்தொகை மற்றும் மாணவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரையிலான கல்விக்கடன் போன்ற இளைஞர்களைக் கவரும் அறிவிப்புகளும் இதில் இடம்பெற வாய்ப்புள்ளது.

அதேபோல், 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் 75,000 ரூபாய் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி போன்ற சில வாக்குறுதிகள் ஏற்கனவே செயல்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், எஞ்சியுள்ள முக்கிய வாக்குறுதிகளுக்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை 2,500 ரூபாயாக உயர்த்தப்படுமா என்பதைத் தமிழகப் பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர். தமிழக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைக்கப்போகும் இந்த பட்ஜெட், மக்களின் கனவுகளை நனவாக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News