தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு அரசு புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. பொதுமக்கள் அரசு ஊழியர்கள் அல்லது அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், உடனடியாக புகார் அளிக்க வசதியாக 9498180936 என்ற வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. அண்மையில் கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், “அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது, இது எங்கள் விஜய் அரசு என்று தைரியமாக கூறுங்கள்” என மக்களை ஊக்குவித்திருந்தார்.
இதையடுத்து, அனைத்து அரசு அலுவலகங்களிலும் மற்றும் பொது இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பலகைகள் கட்டாயம் வைக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். குறிப்பாக, “லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்” என்ற வாசகம் இடம்பெற்ற பலகைகள் தெளிவாக காட்சிப்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், பல அலுவலகங்களில் அவை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. எனவே, இந்த முறை அவற்றை முறையாக அமல்படுத்தி, அதுகுறித்த அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் (DVAC) வாட்ஸ்அப் எண் மற்றும் இணையதள விவரங்கள் அனைத்து அரசு அலுவலகங்களின் இணையதளங்களிலும் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மட்டுமின்றி, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி,044-22321090, 22321085, 22310989, 22342142 ஆகிய தொலைபேசி எண்கள் மற்றும் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் அலுவலக முகவரி மூலமாகவும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
அரசின் இந்த உத்தரவுகள் முறையாக நடைமுறையில் உள்ளனவா என்பதை உறுதி செய்ய, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள ஆய்வுப் பிரிவுகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை அதிகரித்து, லஞ்சம் மற்றும் ஊழலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
