ஜூலை 1 முதல் அமலாகும் புதிய சட்டங்கள் மற்றும் கட்டணங்கள்… சிலிண்டர் முதல் ஆதார் வரை….

ஜூலை 1, 2026 முதல் இந்தியாவில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பல முக்கிய நிதி மற்றும் நிர்வாக மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, வருமான வரி தாக்கல், ஆதார் சேவைகள், ரயில்வே விதிமுறைகள், பாஸ்போர்ட் கட்டணம் மற்றும் வங்கி சேவைகள் உள்ளிட்ட பல துறைகளில் புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாதமும் முதல் தேதி எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு மற்றும் வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை மாற்றி அறிவிக்கின்றன. சமீபத்திய சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் உலக அரசியல் சூழலை கருத்தில் கொண்டு ஜூலை மாத சிலிண்டர் விலை அறிவிப்பு வெளியாகும் என்பதால் பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

2025-26 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாளாகும். அதற்குள் தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஜூலை 1 முதல் டிசம்பர் 31 வரை, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை UIDAI மொபைல் செயலி மூலம் இலவசமாக புதுப்பிக்கலாம். முன்பு இதற்காக ரூ.75 கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இந்திய ரயில்வேயின் புதிய ஐஆர்சிடிசி இணையதளம் ஜூலை 15 முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. மேலும் அபாயகரமான பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்வதற்கான அபராதம் ரூ.250-இல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பெண்கள் பெட்டியில் அனுமதியின்றி பயணம் செய்வது மற்றும் உரிமம் இல்லாமல் விற்பனை செய்வது போன்ற விதிமீறல்களுக்கும் கடுமையான அபராதம் விதிக்கப்படும்.

பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணமும் ஜூலை 1 முதல் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண மற்றும் தட்கல் விண்ணப்பங்களுக்கான சேவை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், புதிய விண்ணப்பதாரர்கள் கூடுதல் செலவை சந்திக்க வேண்டியுள்ளது.

மேலும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தவறாக நிதி தயாரிப்புகளை விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. இதன் மூலம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் இழப்பீடு அல்லது பணத்தைத் திரும்பப் பெறும் உரிமையைப் பெறுவார்கள்.

Related News

Latest News