இனிமேல் கச்சா எண்ணெய் வாங்க டாலர் தேவையில்லை! அமெரிக்காவை அதிரவிடும் ஈரான்!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், சர்வதேச எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அறிவிப்பை ஈரான் வெளியிட்டுள்ளது. உலக நாடுகள் பெரும்பாலும் அமெரிக்க டாலரில்தான் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கி விற்கும் நிலையில், இனி டாலரில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரான் மத்திய வங்கியின் கவர்னர் அப்தோல்நசர் ஹெம்மாட்டி, “எண்ணெய் வாங்கும் நாடுகள் தங்களுக்கு வசதியான எந்த கரன்சியிலும் பணம் செலுத்தலாம்; டாலரில் மட்டுமே செலுத்த வேண்டும் என்ற அவசியமில்லை” என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு உலகளாவிய வர்த்தக வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருந்த ஈரான், தற்போது அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக முடக்கப்பட்டுள்ள 12 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகளை மீட்பது மற்றும் எண்ணெய் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவது போன்ற முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த மாற்றம் இந்தியாவுக்கும் சாதகமாக அமையலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். ஈரான் இந்தியாவிற்கு அருகில் இருப்பதால், கப்பல் போக்குவரத்து செலவும் பயண நேரமும் குறையும். மேலும், மற்ற நாடுகள் 30 நாட்களுக்குள் பணம் செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கும் நிலையில், ஈரான் 60 முதல் 90 நாட்கள் வரை அவகாசம் வழங்கும் நடைமுறையை பின்பற்றி வந்துள்ளது.

2019-ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 11.5 சதவீதம் ஈரானிலிருந்தே வந்தது. ஆனால் அமெரிக்காவின் தடைகளால் அந்த வர்த்தகம் நிறுத்தப்பட்டது. தற்போது தடைகள் தளர்ந்தால், விலைச் சலுகை, போக்குவரத்து வசதி மற்றும் வர்த்தக நிபந்தனைகளைப் பொறுத்து இந்தியா மீண்டும் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குமா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்தியாவின் அடுத்தகட்ட முடிவு எவ்வாறு இருக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Related News

Latest News