தமிழகம் முழுவதும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலம் முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய பொது இடங்கள் உள்ளிட்ட மொத்தம் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமின் மூலம் 5 வயதிற்குட்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து பெற்றிருந்த குழந்தைகளுக்கும், முகாம் நடைபெறும் நாளில் மீண்டும் மருந்து வழங்க வேண்டும் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சுங்கச் சாவடிகள், சோதனைச் சாவடிகள் மற்றும் விமான நிலையங்களில் தற்காலிக மையங்கள் அமைக்கப்பட்டு, பயணத்தில் உள்ள குழந்தைகளுக்கும் மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மையங்களும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைவாழ் மக்களின் குழந்தைகளை சென்றடைந்து மருந்து வழங்க நடமாடும் மருத்துவக் குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்தப் பணியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
