உலகம் முழுவதும் ஈரான் போர் சூழ்நிலை, அதனால் ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வு, எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு போன்ற பொருளாதார அசாதாரண நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சீனா தங்கத்தை பெருமளவில் வாங்கி குவித்து வருவதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ப்ளூம்பெர்க் வெளியிட்ட அறிக்கையின் படி, இது உலக சந்தையில் கவனத்தை ஈர்க்கும் ஒரு முக்கிய பொருளாதார நகர்வாக பார்க்கப்படுகிறது.
மே மாதத்தில் மட்டும் சீனா சுமார் 163 டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச அளவாகும். மேலும் 2026ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மொத்தமாக சுமார் 692 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட சுமார் 76% அதிகம் எனவும் கூறப்படுகிறது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை ஜனவரியில் வரலாற்று உச்சத்தை எட்டிய பின்னர் சுமார் 25% வரை குறைந்தது. இந்த விலை சரிவை ஒரு நல்ல வாங்கும் வாய்ப்பாக கருதி சீனாவில் தங்கத்தின் மீது அதிக முதலீடு நடைபெறுகிறது. தனிநபர்கள் மட்டுமின்றி தங்கக் கட்டிகள் மற்றும் சேமிப்பு திட்டங்களில் வங்கிகள் மூலமாகவும் அதிக ஆர்வம் காணப்படுகிறது. பொருளாதார சூழலில் தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவது இதற்குக் காரணமாகும்.
மேலும், ஜூன் 1 முதல் சீனாவில் புதிய தங்க இறக்குமதி உரிமம் முறை அமலுக்கு வந்ததால், சில வங்கிகளுக்கு வழங்கப்பட்ட இறக்குமதி கோட்டாக்களை பயன்படுத்த முன்பாகவே அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். ஹாங்காங் உள்ளிட்ட பகுதிகளில் புதிய தங்க வர்த்தக அமைப்புகள் உருவாகி வருவதும் தேவையை அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில், அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைத்து யுவானின் பங்கு அதிகரிக்க வேண்டும் என்ற சீனாவின் நீண்டகால பொருளாதார இலக்குகளும் இதற்கு காரணமாக கூறப்படுகின்றன. அதிகளவு தங்க கையிருப்பு ஒரு நாட்டின் நாணய வலிமையை உயர்த்தும் என்பதால் சீனா தொடர்ந்து தங்கத்தை சேமித்து வருகிறது. இதனால் உலக தங்க சந்தையில் சீனாவின் தாக்கம் மேலும் அதிகரித்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
