“செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை …” – CM குட்டிக்கதைக்கு உதயநிதி பதிலடி…!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை கடுமையாக விமர்சித்தார். மின்வெட்டு அதிகரித்துள்ளதாகவும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் உயர்ந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், இந்த பிரச்சினைகளுக்கு முதலமைச்சர் விஜய் நேரடியாக பதிலுரை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற அமர்வில் முதலமைச்சர் விஜய் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கினார். தனது உரையில் டாஸ்மாக் தொடர்பான விவகாரத்தை குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார். அதேசமயம், டாஸ்மாக் கட்சி நிதி எனக் கூறிய போது எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதையடுத்து சபாநாயகர், முதல்வர் பேசி முடித்த பிறகு எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.

பதிலுரையின் போது எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது. அதற்கிடையில், முதலமைச்சர் விஜய் தனது உரையில் ஒரு குட்டிக்கதையை எடுத்துரைத்தார். வெயிலில் நின்று எதையோ தேடும் வயதானவர் மற்றும் சிறுவன் இடையிலான உரையாடலை எடுத்துக்காட்டாக கூறி, சம்பந்தம் இல்லாத கதைகளை தானும் சொல்ல முடியும் என சுட்டிக்காட்டினார்.

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்தார். சட்டப்பேரவையில் நடைபெற்ற உரை “scripted performance” போல இருந்ததாகவும், அது ஒரு திரைப்படக் காட்சி போன்று நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். எதிர்க்கட்சிகளின் குறுக்கீடு இன்றி ஒரே டேக்கில் உரையை முடிக்க முயன்றது சரியல்ல என்றும் அவர் விமர்சித்தார்.

மேலும், மின்வெட்டு, விவசாயிகள் பிரச்சினை, சட்டம் ஒழுங்கு நிலைமை போன்ற முக்கிய விஷயங்களுக்கு பதில் இல்லை எனவும் அவர் கூறினார். விவசாயிகளை குறை கூறியது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் குறிப்பிட்டார். இறுதியாக, நடிகர் விஜய் மனப்பான்மையை விடுத்து தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.

Related News

Latest News