EPS யை சந்திக்காததற்கு இதுதான் காரணம்.. அமைச்சர் விளக்கம்

தலைமைச் செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பல்வேறு அரசியல் குற்றச்சாட்டுகள் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார்.

கட்சி நிதி தொடர்பாக பேசப்பட்டதும், எதிர்க்கட்சியினர் “திருடனுக்கு தேள் கொட்டியதைப் போல” பேரவையை விட்டு வெளியேறிவிட்டனர் என்று அவர் விமர்சித்தார். எதிர்க்கட்சி தலைவர் தனது அறையிலிருந்தே முதலமைச்சரின் உரையை முழுமையாக பார்த்ததாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் காலத்திலிருந்தே திமுக கிண்டல் அரசியலை மேற்கொண்டு வருவதாகவும், அதே பாணி இன்றும் தொடர்வதாகவும் அவர் கூறினார். எம்ஜிஆர் பேசும்போதும் இதுபோன்ற கிண்டல்கள் நடந்ததாகவும் அவர் நினைவூட்டினார்.

தலைமைச் செயலகம் முன்பு புரோக்கர்கள் நடமாடிய இடமாக இருந்ததாகவும், தற்போது அது மாறி சாமானிய மக்கள் நேரடியாக வந்து செல்லும் இடமாக உருவெடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். அமைச்சர்களை மக்கள் சந்திக்க முடியும் சூழல் தற்போது உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முதலமைச்சர் அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்தபோது, எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்டதாகவும், உட்கட்சி பிரச்சனைகளால் அந்த சந்திப்பு நடைபெறவில்லை எனவும் அவர் கூறினார். சி.வி. சண்முகம் தரப்பை முதலமைச்சர் சந்தித்ததில் எந்த தவறும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

மேலும், கடந்த 40 நாட்களின் சாதனைகளை உள்ளடக்கியதாக முதலமைச்சரின் உரை இருந்தது என்றும், “நான் முதல்வன்” திட்டம் முடக்கப்படவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார். பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ விவகாரம் உண்மையா என்பதை ஆய்வு செய்ய திமுக தயாரா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Related News

Latest News