சீண்டிய சேகர் பாபு – வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறநிலையத்துறை தொடர்பான விவாதத்தின் போது கோவில் நிதி பயன்பாடு குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், “அறநிலையத்துறை பள்ளி மற்றும் கல்லூரிகள் நடத்தக்கூடாது என்பது பாஜகவின் நிலைப்பாடு. அதே நிலைப்பாட்டில்தான் அரசு செயல்படுகிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், “கோவில் வருமானம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பயன்படுத்தப்படும் என்று ஆளுநர் உரையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கோவில்களில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கழிப்பறை வசதி இல்லாத கோவிலுக்கு ரூ.10 கோடி செலவில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைப்பது எந்த வகையில் அவசியம்? கடந்த ஆட்சியில் திருமண மண்டபங்கள் போன்ற வணிக நோக்கங்களுக்காக அறநிலையத்துறை நிதி பயன்படுத்தப்பட்டது” என்றார்.

மேலும், பழனியில் சித்த மருத்துவமனை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க தயாராக இருந்தபோதும், அதனை முந்தைய ஆட்சி தடுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். “நாங்கள் யாருக்கும் ‘பி டீம்’ ஆக செயல்பட வேண்டிய அவசியமில்லை” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “எம்எல்ஏக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில்தான் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன. குன்னூரில் சுற்றுலா பயணிகள் வசதிக்காகவும், நகராட்சிக்கு வருவாய் கிடைப்பதற்காகவும் மல்டி லெவல் பார்க்கிங் திட்டம் கொண்டு வரப்பட்டது” என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ரமேஷ், “குன்னூர் விநாயகர் கோவில் நிலத்தில் கார் பார்க்கிங் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தாலும், கோவில் நிதியை பயன்படுத்தியது ஏன்? பக்தர்கள் கார் பார்க்கிங் கேட்டார்களா, அல்லது நிம்மதியான தரிசனத்தை கேட்டார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “பெரிய கோவில்களில் மல்டி லெவல் பார்க்கிங் என்பது அத்தியாவசியமான வசதியாகும். அது தேவையற்றது என்று கூற முடியாது” என்றார்.

Related News

Latest News