நடிகை சமந்தா நடித்துள்ள ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, சமந்தாவின் நெருங்கிய தோழியும், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்தவருமான நயன்தாரா, சமூக வலைதளத்தில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்ட நயன்தாரா, “உனக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் சாம். அன்பும் வெற்றியும் அனைத்திற்கும் நீ தகுதியானவள். ‘மா இண்டி பங்காரம்’ படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மையோசிடிஸ் பாதிப்புக்கான சிகிச்சைக்குப் பிறகு சிறிய இடைவெளி எடுத்திருந்த சமந்தா, இந்த திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் உற்சாகமான வரவேற்பைப் பெற்றுள்ளார். இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இப்படத்தை சமந்தாவே தயாரித்ததுடன், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
‘ஸ்வர்ணா’ என்ற கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ள இந்த படத்தில், தனது கடந்தகால ரகசியத்தை மறைத்து ஒரு கிராமத்து குடும்பத்திற்குள் நுழையும் பெண்ணின் கதையை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பெண் மையப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம், வெளியான முதல் நாளிலேயே குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்று, பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இதற்கிடையில், படத்தின் வெற்றி விழாவில் சமந்தா கலந்து கொண்டபோது, அவர் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவின. மேலும், இதுகுறித்து இயக்குநர் நந்தினி ரெட்டி உறுதிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமந்தா தற்போது ‘ரக்த பிரம்மாண்ட்’ வெப் தொடரில் நடித்து வருகிறார். நயன்தாரா தமிழில் ‘ஹாய்’, ‘மூக்குத்தி அம்மன் 2’, ‘ராக்காயி’ உள்ளிட்ட படங்களிலும், கன்னடத்தில் ‘டாக்ஸிக்’ படத்திலும் பிஸியாக உள்ளார்.

