ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தற்போது நிலவி வரும் போர்ச் சூழலுக்கு மத்தியில், வளைகுடா நாடுகளில் புதிய அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளார். இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று அவர் தனது சமீபத்திய உரையில் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, ஈரான் மீது தொடுக்கப்பட்டுள்ள போர் மற்றும் பொருளாதாரத் தடைகளுக்குப் பின்னால் மிகப்பெரிய சர்வதேசச் சதி இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். வளைகுடா பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றத்தைத் தணிப்பதை விட, ஈரானைத் தனிமைப்படுத்துவதே சில வல்லரசு நாடுகளின் நோக்கமாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிபர் பெசெஷ்கியான் தனது உரையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலைத் நேரடியாகச் சாடியுள்ளார். வளைகுடா நாடுகளை ஈரானுக்கு எதிராகத் திருப்பிவிட இந்த இரு நாடுகளும் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
“வளைகுடா நாடுகள் நம்முடைய சகோதரர்கள், ஆனால் அமெரிக்காவும் இஸ்ரேலும் நம்மிடையே பிரிவினையைத் தூண்டி, இந்தப் பிராந்தியத்தின் அமைதியைக் குலைக்கத் துடிக்கின்றன” என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் வளர்ச்சியைத் தடுப்பதற்கும், அந்தப் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கும் அமெரிக்கா இத்தகைய சூழ்ச்சிகளைச் செய்வதாக அவர் விளக்கியுள்ளார்.
இந்தப் போரின் மிக முக்கியமான மையப்புள்ளியாக ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) மாறியுள்ளது. உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் இந்த வழித்தடத்தை மீண்டும் வணிக ரீதியாகத் திறப்பது குறித்துப் பெரும் இழுபறி நீடித்து வருகிறது.
இதைக் கட்டுப்படுத்துவதில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் மோதல், சர்வதேசச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போக்குவரத்து வழித்தடத்தைப் பாதுகாப்பதிலும், அதில் வளைகுடா நாடுகளின் உரிமையை நிலைநாட்டவும் தங்களுக்குள் ஒற்றுமை அவசியம் என பெசெஷ்கியான் அழைப்பு விடுத்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான இந்தப் போர் என்பது ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் என்றும் அவர் கூறியுள்ளார். வெளியாரின் தலையீடு இல்லாமல் வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே, இந்தப் பிராந்தியத்தில் நிரந்தர அமைதியைக் கொண்டுவர முடியும் என்று அவர் நம்புகிறார்.
ஈரானின் இந்த ஒருமைப்பாட்டு அழைப்பு, வளைகுடா அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துமா அல்லது மோதல் இன்னும் தீவிரமடையுமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
