மீன் பிரியர்கள் சிலர் சிறிய மீன்களை விரும்புவார்கள். இன்னும் சிலர் பெரிய மீன்களை விரும்புவார்கள். ஆனால் ஒரு சிலருக்கு மீன் என்றாலே பயமோ குழப்பமோ இருக்கும். முள் இருக்கும், எந்த மீனை தேர்ந்தெடுப்பதென்றே தெரியவில்லை என குழம்பிக் கொண்டிருப்பார்கள் . அப்படியாவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் மீன் இருக்கிறது.அந்த மீன் பாசா. இது முள் இல்லாத, சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒரு சிறந்த மீன் வகை. இதில் நடுவில் ஒரே ஒரு பெரிய முள் மட்டுமே இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயமின்றி சுவைத்து சாப்பிடலாம்.
மேலும், இதில் உடலுக்கு நன்மை தரும் உயர்தர புரதங்கள் மற்றும் குறைந்த அளவு கொழுப்புகள் நிறைந்துள்ளதால், இது உடல் எடையைக் குறைக்கவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஒரு ‘சூப்பர் ஃபுட்’ ஆகக் கருதப்படுகிறது.பாசா மீனில் புரதம் நிறைந்து இருப்பதால், உடற்பயிற்சி செய்பவர்களும் மற்றும் ஏதேனும் பெரிய அல்லது நீண்ட கால நோயில் இருந்து மீண்டு வருபவர்களும் இந்த மீனைத் தங்களது உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும், இது மிக எளிதாக செரிமானம் ஆகக்கூடியது என்பதால், அளவோடு சாப்பிடும் போது இது அன்றாட உணவில்கூட சேர்த்துக் கொள்ளும்படியாக இருக்கும்.
பாசா மீன் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகக் கருதப்பட்டாலும், சில குறிப்பிட்ட நபர்கள் இதனை எச்சரிக்கையுடன் சாப்பிட வேண்டும்; குறிப்பாக மீன் ஒவ்வாமை உள்ளவர்கள், ஏற்கெனவே சிறுநீரக நோய் அல்லது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே இந்த மீனைத் தங்களது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதய ஆரோக்கியத்தைப் பேண நினைப்பவர்கள் இந்த மீனை அதிக எண்ணெயில் பொரிப்பதைத் தவிர்த்து, ஆவியில் வேகவைத்தோ அல்லது மிகக் குறைந்த எண்ணெயில் கிரில் செய்தோ சாப்பிட்டு வரலாம்; அதேபோல தேங்காய் சேர்க்காமல் தக்காளி, புளி மற்றும் பூண்டு போன்ற இயற்கை பொருட்கள் கொண்டு பாரம்பரிய முறையில் குழம்பாகச் சமைத்துச் சாப்பிடுவதும் இதன் முழுமையான ஒமேகா-3 நன்மைகளைப் பெற வழிவகுக்கும்.
