கனமழை அலர்ட் வெளியீடு… 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..

தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமடைந்துள்ள நிலையில், வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிக வெப்பம் நிலவினாலும், பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் வெப்பமும் மழையும் இணைந்த வானிலை நிலை உருவாகும் சூழல் காணப்படுகிறது.

வானிலை நிபுணர்கள் தெரிவித்ததாவது, வட தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இடங்களில் மேலடுக்கு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் மேலடுக்கு சுழற்சி தொடர்வதால், தமிழகத்தின் பல பகுதிகளில் மேகமூட்டத்துடன் மழை பெய்யும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை வெப்பநிலை பதிவுகளில் வேலூரில் அதிகபட்சமாக 41.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. தர்மபுரியில் குறைந்தபட்சமாக 23 டிகிரி மற்றும் உதகமண்டலத்தில் 13.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மேகமூட்டமான வானிலை நீடிக்கும் என்றும், காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related News

Latest News