தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கையில், ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்களுக்கு 50 சதவீத கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தற்போது வெளியிட்டுள்ள பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பு விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரசின் புதிய அறிவிப்பின்படி, குறு விவசாயிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இரண்டரை ஏக்கருக்கு மேல் மற்றும் ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகளுக்கு 50 ஆயிரம் ரூபாயில் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பயிர் கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு வெறும் 5 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்கள் அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. தேர்தலுக்கு முன் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை என்றும், விவசாயிகளை ஏமாற்றியுள்ளது என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். பின்னர், நெற்றியில் நாமம் இட்டுக்கொண்டு, கையில் துண்டு ஏந்தி, மடி பிச்சை எடுக்கும் வகையில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். “ஜோசப் விஜய் அண்ணாச்சி கூட்டுறவு கடன் தள்ளுபடி என்ன ஆச்சு?” எனக் கண்டன கோஷங்களை எழுப்பிய அவர்கள், அரசின் நடவடிக்கைக்கு எதிராக கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
