தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற சில நாட்களிலேயே, தனது அதிரடி ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறார் ஜோசப் விஜய். “சொன்னதைச் செய்வோம்” என்பதற்குச் சான்றாக, தமிழகம் முழுவதும் விதிகளை மீறிச் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மீது தனது முதல் அதிரடிச் சாட்டையைச் சுழற்றியிருக்கிறார். குறிப்பாகப் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு மிக அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன் மூலம் தமிழகம் முழுவதும் மொத்தம் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன. இதில் முதற்கட்டமாக, பெண்கள் மற்றும் மாணவிகளுக்குப் பெரும் இடையூறாக இருக்கும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகளை இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்குக் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின் போதே, “பெண்கள் பாதுகாப்பிலும் போதைப்பொருள் ஒழிப்பிலும் எனது அரசு சமரசம் செய்துகொள்ளாது” என விஜய் முழங்கியிருந்தார். பதவியேற்ற அன்றே ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையை உருவாக்கி ஆச்சரியப்படுத்தியவர், தற்போது மது அரக்கனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து 500 மீட்டர் எல்லைக்குள் மதுக்கடைகள் இருக்கக்கூடாது என்ற விதியைத் தீவிரமாக அமல்படுத்தத் தற்போது கணக்கெடுப்புப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. முதல்வர் நடத்திய முதல் ஆய்வுக் கூட்டத்திலேயே, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையில் பள்ளிகளுக்கு அருகில் மதுக்கடைகள் இயங்குவது குறித்துத் தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்ததோடு, அவற்றைத் தட்சணமே மூடவும் ஆணையிட்டிருக்கிறார்.
இந்தத் திடீர் அறிவிப்பு தமிழகப் பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய ‘ஜாக்பாட்’ செய்தியாகப் பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாகப் பொதுமக்கள் போராடியும் அகற்றப்படாத பல கடைகள், தற்போது முதல்வரின் ஒற்றைக் கையெழுத்தில் காணாமல் போகப்போகின்றன.
அதே நேரத்தில், டாஸ்மாக் மூலம் வரும் வருமானம் குறையுமே என்ற கேள்விக்கு, “மக்களின் நிம்மதியே முக்கியம்” என்ற ரீதியில் தவெக அரசு காய்நகர்த்தி வருகிறது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று அரியணையில் ஏறியுள்ள விஜய், திராவிடக் கட்சிகளின் 60 ஆண்டுகாலப் பாதையிலிருந்து விலகி, ஒரு புதிய நிர்வாகப் பாணியைக் கையில் எடுத்திருக்கிறார். இனி கல்வி நிறுவனங்களுக்கு அருகில் புதிய மதுக்கடைகள் திறக்கப்படாது என்ற உறுதியான தகவலும் வெளியாகியுள்ளது.
