மாதம் 2,500 ரூபாய் கிடைக்குமா? விஜய்க்கு ஸ்டாலின் கொடுத்த ‘இமாலய’ சவால்!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய அத்தியாயம் தற்போது தொடங்கியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், இன்னும் ஓரிரு நாட்களில் ஆட்சியமைக்கத் தயாராகி வருகிறது.

பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான சில இடங்களைத் திரட்டும் முயற்சியில் விஜய் தரப்பு தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், தவெக ஆட்சி அமைப்பதில் திமுக எந்தவித முட்டுக்கட்டையையும் ஏற்படுத்தாது என்று அக்கட்சியின் தலைவரும், காபந்து முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தையும், அதே நேரத்தில் ஒரு சுமுகமான அதிகார மாற்றத்திற்கான அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த ஸ்டாலின், “விஜய்யின் புதிய அரசு அமைவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், எங்களது அரசு கொண்டு வந்த மிக முக்கியமான நலத்திட்டங்களை அவர்கள் நிறுத்தாமல் தொடர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக, அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்காகத் தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம் மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகக் கொண்டு வரப்பட்ட மாதம் 1,000 ரூபாய் வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ ஆகியவற்றைத் தடையின்றி வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். சுமார் 1.06 கோடி பெண்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாகச் செல்லும் இந்த 1,000 ரூபாய் என்பது திமுக அரசின் மிக முக்கியமான சாதனையாகப் பார்க்கப்படும் நிலையில், இதனைத் தொடர்வது புதிய அரசின் கடமை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்குதான் விஜய்யின் அரசுக்கு ஒரு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. தனது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று விஜய் அதிரடி வாக்குறுதி அளித்திருந்தார். இது குறித்துப் பேசிய ஸ்டாலின், “தற்போதைய தமிழகத்தின் நிதிநிலையில் மாதம் 2,500 ரூபாய் வழங்குவது என்பது மிகவும் கடினமான காரியம்.

மாநிலத்தின் கடன் சுமை அதிகமாக இருப்பதால், ஒருவேளை அவர்களால் 2,500 ரூபாய் தர முடியாவிட்டாலும், நாங்கள் ஏற்கனவே வழங்கி வந்த 1,000 ரூபாயையாவது எக்காரணம் கொண்டும் நிறுத்தாமல் வழங்க வேண்டும்” என்று தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். மேலும், ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசம் என்ற விஜய்யின் வாக்குறுதி நிறைவேற்றக் கடினமானது என்றாலும், அதனைச் செயல்படுத்தினால் தங்களுக்கு மகிழ்ச்சியே என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கடந்த 2021 தேர்தலில் திமுக அளித்த 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகக் குறிப்பிட்ட ஸ்டாலின், நீட் ரத்து போன்ற சில விவகாரங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மட்டுமே தாமதமானது என்று விளக்கம் அளித்துள்ளார். இப்போது பந்து விஜய்யின் பக்கத்தில் இருக்கிறது.

மாநிலத்தில் ஏற்கனவே உள்ள லட்சக்கணக்கான கோடி கடனைச் சமாளித்துக்கொண்டு, தான் வாக்களித்தபடி பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாயை விஜய்யால் வழங்க முடியுமா? அல்லது திமுக வழங்கிய 1,000 ரூபாயையே அவர் தொடருவாரா? என்பதுதான் தற்போதைய மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. திராவிட மாடல் திட்டங்களை விஜய் அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் தற்போது உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.

Related News

Latest News