பதுங்கு குழியில் புடின்..! ரஷ்யாவுக்கு வந்த சோதனை!

உலக அரசியலில் மிகவும் சக்திவாய்ந்த தலைவராகக் கருதப்படும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தற்போது தனது உயிருக்கு அஞ்சி, ரகசிய பதுங்கு குழிகளில் வாழ்ந்து வருவதாக வெளியாகி உள்ள தகவல் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ஒரு முடிவுக்கு வராத நிலையில், புதின் மீதான கொலை முயற்சி அச்சம் மற்றும் ராணுவச் சதி குறித்த பயம் கிரெம்ளின் மாளிகையை ஆட்கொண்டுள்ளது. இதன் காரணமாக புதினின் பாதுகாப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ‘பைனான்சியல் டைம்ஸ்’ இதழ் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, உக்ரைன் நடத்திய ‘ஆபரேஷன் ஸ்பைடர் வெப்’ என்ற ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு புதின் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறார். அவர் தற்போது மாஸ்கோவில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லங்களிலோ அல்லது வழக்கமான தங்கும் விடுதிகளிலோ தங்குவதைத் தவிர்த்து வருகிறார்.

அதற்குப் பதிலாக, தெற்கு ரஷ்யாவில் உள்ள கிராஸ்னோடர் பகுதியில் உள்ள அதிநவீன வசதிகள் கொண்ட நிலத்தடி பதுங்கு குழிகளில் இருந்தே அவர் தனது போர்ப்பணிகளை கவனித்து வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் பொதுமக்களைச் சந்திப்பதும், நாட்டின் நிர்வாக விஷயங்களில் நேரடியாகத் தலையிடுவதும் பெருமளவில் குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் புதினோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவருக்கு மிக நெருக்கமாகப் பணிபுரியும் சமையல்காரர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றும், மொபைல் போன்கள் அல்லது இணைய வசதி கொண்ட எந்த ஒரு மின்னணு சாதனத்தையும் புதினுக்கு அருகில் கொண்டு செல்லக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க இவர்களது வீடுகளிலேயே பாதுகாப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. சமீபகாலமாக மாஸ்கோவில் இணையச் சேவைகள் அடிக்கடி முடக்கப்படுவதன் பின்னணியில், ட்ரோன் தாக்குதல்களைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நெறிமுறைகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ரஷ்யாவிற்குள் நிலவும் இந்த அசாதாரண சூழல், அந்நாட்டு ராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகளிடையே பெரும் மோதலை உருவாக்கியுள்ளது. மூத்த ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதற்கு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில், புதின் தனது நம்பிக்கைக்குரிய பத்து ஜெனரல்களுக்குத் தனிப்பட்ட பாதுகாப்பை வழங்க உத்தரவிட்டுள்ளார். ஒருபுறம் பாதுகாப்பு நெருக்கடி என்றால், மறுபுறம் ரஷ்ய மக்கள் மத்தியிலும் புதினுக்கு எதிரான அதிருப்தி குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

இணைய முடக்கம் மற்றும் புதிய வரிகள் காரணமாக மக்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். போர் முனையில் உக்ரைனைச் சமாளிப்பதை விட, தனது சொந்த பாதுகாப்பை உறுதி செய்வதே புதினுக்கு இப்போது மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.

Related News

Latest News