நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முக்கியமான கவனத்தை பெற்றுள்ளது. இந்த தேர்தலில் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் அவர் அபாரமான வெற்றியை பதிவு செய்துள்ளார்.
பெரம்பூர் தொகுதியில் விஜய் 1 லட்சத்து 19 ஆயிரத்து 454 வாக்குகள் பெற்று, தனது எதிர்ப்பாளரை 53 ஆயிரத்து 532 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில் 91 ஆயிரத்து 381 வாக்குகள் பெற்று, சுமார் 27 ஆயிரத்து 416 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த இரட்டை வெற்றிகள் தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளின்படி ஒரே நபர் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் விஜய் எந்த தொகுதியை தக்கவைத்துக் கொள்வார், எதை ராஜினாமா செய்வார் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.
தற்போது கிடைக்கும் தகவலின்படி, விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்து, பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக தொடர வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. இந்த முடிவு உறுதியானால், திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும். அந்த இடைத்தேர்தலில் லால்குடி தொகுதியில் தோல்வியடைந்த கு.ப. கிருஷ்ணன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழ்நிலை, தேர்தலுக்கு பிந்தைய தமிழக அரசியல் நிலையை மேலும் சிக்கலாக்கி, எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
