தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி, நடிகர் விஜய்யின் தவெக மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை போட்டியிட்டன.
நான்கு முனை போட்டியாக நடைபெற்ற இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களமிறங்கினர். தமிழக தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக சுமார் 85 சதவீதம் வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 62 மையங்களில் எண்ணப்படுகின்றன. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் எண்ணப்படும். தேர்தல் முடிவுகளை பொதுமக்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள தேர்தல் ஆணையம் பல ஏற்பாடுகளை செய்துள்ளது.
அதன் இணையதளம் மற்றும் ECINET, Voter Helpline போன்ற மொபைல் செயலிகள் மூலம் நேரடி தகவல்கள் பெற முடியும். காலை 9 மணி முதல் முன்னிலை நிலவரங்கள் வெளியாகத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், எந்தக் கட்சி முன்னிலை வகிக்கிறது, யார் ஆட்சியை அமைக்க வாய்ப்பு உள்ளது என்பதற்கான தெளிவு படிப்படியாக கிடைக்கும்.
இன்று பிற்பகலுக்குள் முழுமையான முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக அமையும் என்பதால், அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
