தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. தற்போது வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளன. இந்த சூழலில், மாநிலம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் மத்தியில் மகளிர் உரிமைத்தொகை குறித்து குழப்பம் நிலவுகிறது.
2021ஆம் ஆண்டு தேர்தலில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் தேர்தலில் முக்கிய பங்காற்றி, பின்னர் 2023ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டது. தற்போது 1.30 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த திட்டத்தின் பயனாளிகளாக உள்ளனர்.
தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே, எதிர்கால சட்ட சிக்கல்களை தவிர்க்கும் நோக்கில், அரசு பிப்ரவரி மாதத்தில் முன்கூட்டியே 5000 ரூபாய் வழங்கியது. இதில் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு முன்பணம் மற்றும் கோடைகால சிறப்பு தொகையும் அடங்கும். இதனால் மே மாதத்தில் தொகை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மே 6 வரை அமலில் இருப்பதால், மே மாதத்தில் புதிய தொகை வழங்குவது சாத்தியமில்லை என கருதப்படுகிறது. இதனால் ஜூன் மாதம் முதல் மீண்டும் தொகை வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது. அதேசமயம், மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் தொகை உயர்வு குறித்த அறிவிப்பும் வெளியாகலாம்.
மேலும் அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் போன்ற கட்சிகளும் அதிக தொகை வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளன. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், புதிய அரசு அமைந்த பின் திட்டம் நடைமுறைக்கு வரும் என்பதால், பெண்கள் ஜூன் மாதத்திலிருந்து நன்மை பெற வாய்ப்புள்ளது.
