பிரியாணி+ தர்பூசணி சாப்பிட்டதால் பறிபோன 4 உயிர்கள் ? மருத்துவர்கள் தந்த முக்கிய விளக்கம் !…

மும்பை பய்தூனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவில் தர்பூசணி சாப்பிட்டதால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது எனச் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வரும் நிலையில்,மருத்துவ உலகம் சில முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது

கடந்த ஏப்ரல் 25ம் தேதி உயிரிழந்த நான்கு பேர் , தங்களது உறவினர்களுடன் சேர்ந்து இரவு 10:30 மணியளவில் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். உறவினர்கள் சென்ற பிறகு, நள்ளிரவு 1:00 மணியளவில் குடும்பத்தினர் அனைவரும் தர்பூசணி பழத்தைச் சாப்பிட்டுள்ளனர். அதிகாலை 5:30 மணியளவில் நான்கு பேருக்கும் கடுமையான வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு ,மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நான்கு பேருமே அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

பிரியாணி சாப்பிட்ட பிறகு அவர்கள் தர்பூசணி சாப்பிட்டதே உயிரிழப்பிற்குக் காரணம் எனத் தகவல்கள் பரவியதால் பலரும் அச்சமடைந்தனர். இருப்பினும், இதற்கு தர்பூசணி காரணமில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். முதற்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, நான்கு பேரின் சிறுநீரகங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,அவர்களுக்குக் கடுமையான புட் பாய்சனிங் ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

உயிரிழப்பிற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த அறிக்கை வந்த பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த உயிரிழப்பிற்கு என்ன காரணம் என்பது உறுதியாகத் தெரியவில்லை என்ற போதிலும் பழங்களைச் சாப்பிடும்போது சில விஷயங்களைப் கடைபிடிக்க வேண்டியது மிக அவசியம் .குறிப்பாக பழங்களைச் சாப்பிடுவதற்கு முன்பு தோலை நன்றாகக் கழுவுவது முக்கியமாகும் .குறிப்பாக தர்பூசணி போன்ற பழங்களை வெட்டியவுடன் சாப்பிடுவது சிறந்தது. அதிக நேரம் வெளியிலேயே வைக்கப்பட்ட பழங்களில் பாக்டீரியாக்கள் வேகமாக வளரும்.

இரவில் தர்பூசணி சாப்பிட்டால் மரணம் என்பது சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தி தொடர்பாக போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், வரும் நாட்களில் உண்மை காரணம் தெரிய வரும் என சொல்லப்படுகிறது

Related News

Latest News