ரயில்வே துறையில் மாற்றுத்திறனாளிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் மிக முக்கியமான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. சாதாரண மற்றும் விரைவு ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ள சிறப்பு பெட்டிகளில் பயணிப்பதற்கான விதிமுறைகளை ரயில்வே வாரியம் தற்போது தளர்த்தியுள்ளது.இது குறித்து, ரயில்வே வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்திய ரயில்வே வாரியம் சார்பில் இயக்கப்படும், ஒவ்வொரு சாதாரண மற்றும் விரைவு ரயில்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பயணிக்க, ரயில்வே வாரியம் வழங்கும் கட்டண சலுகை, பாஸ் பெற்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
இதர மாற்றுத் திறனாளிகள், முன்பதிவில்லாத சாதாரண பெட்டிகளில் கட்டணம் செலுத்தி பயணித்து வந்தனர். இந்நிலையில், தேசிய மாற்றுத் திறனாளி நலத்துறை வாயிலாக, யுடிஐடி என்னும் தனித்துவமான அடையாள அட்டை பெற்ற அனைவரும், இப்பெட்டிகளில் பயணிக்கலாம்.ரயில்வே வாரியத்தின் கட்டண சலுகை பாஸ் பெற்றவர்களும் இப்பெட்டிகளில் பயணிக்கலாம். அத்தகைய பாஸ் பெறாத மாற்றுத் திறனாளிகள், கட்டண டிக்கெட் பெற்று, தங்கள் யுடிஐடி அட்டையை காட்டி, இந்த சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்.அனுமதியின்றி இப்பெட்டியில் பயணிக்கும் இதர பயணிகள் மீது, ரயில்வே சட்டத்தின் கீழ், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரயில்வே வாரியத்தின் பிரத்யேக சலுகை பாஸ் இல்லாதவர்கள் பொதுப் பெட்டிகளில் கூட்ட நெரிசலில் சிக்கிப் பயணிக்கும் நிலை இதுவரை இருந்தது.. ஆனால் இனி யுடிஐடி (UDID) அட்டை வைத்திருக்கும் அனைவரும் தங்களுக்குரிய சிறப்புப் பெட்டிகளிலேயே பயணிக்க முடியும் என்பது மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது.இதனால் அவசரப் பயணங்களின் போது சலுகை பாஸிற்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.இந்த மாற்றம் அவர்களின் பயணத்தை எளிமையாகவும் கௌரவமானதாகவும் மாற்றியுள்ளது.
