சார்பதிவாளர் அலுவலகம் சென்று ஒரு பத்திரத்தை பதிவு செய்வது என்பது அத்தனை எளிதான காரியம் கிடையாது. அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்க வேண்டும் , முன்னதாகவே டோக்கன் பெற வேண்டும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் நிலத்தை விற்பனை செய்பவர் , நிலத்தை வாங்குபவர் , சாட்சியம் என அனைவரின் ஐடி கார்டுகளையும் பெற்று ஆய்வு நடத்திய பிறகு தான் அந்த பத்திர பதிவு என்பதே நடக்கும்.ஆனால் அதில் தமிழ்நாடு அரசு ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. சொத்து , பத்திர பதிவுக்காக சார்பதிவாளர் அலுவலகத்தில் நாள் முழுக்க காத்திருக்க வேண்டும் என்ற நிலை இனி இருக்காது.
சார்பதிவாளர் அலுவலகங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பத்திர பதிவை எளிமைப்படுத்தும் வகையிலும் பத்திர பதிவு அலுவலகங்களில் ஸ்டார் 3.0 சாப்ட்வேரின் முதல் பகுதியை அண்மையில் தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்தது.இந்த புதிய சாப்ட்வேர் பயன்பாட்டுக்கு வந்ததை அடுத்து பொதுமக்கள் எங்கிருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் பத்திரங்களை பதிவு செய்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மக்கள் வரவேண்டிய தேவையே இல்லை. வீட்டில் இருந்தபடியே தங்களுக்கான பத்திரப்பதிவை முடிக்க ஏதுவாக வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன
புதிதாக அறிவிக்கப்பட்ட அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்குவோர் அதற்கான பத்திரங்களை பதிவு செய்வதற்கு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வர வேண்டாம் இந்த திட்டத்தை செயல்படுத்தும் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்தபடியே பத்திரங்களை பதிவு செய்ய முடியும்.அது மட்டுமில்லாமல் வில்லங்க சான்றிதழ் மற்றும் நகல் பத்திரங்களை ஆன்லைனில் கட்டணம் செலுத்தி சில நிமிடங்களிலேயே பெற்றுக் கொள்ளும் வசதியும் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பொதுமக்கள் பத்திரப்பதிவுக்காக நேரத்தை வீண் செய்ய தேவையில்லை அதே போல மக்களின் அலைச்சலும் குறைக்கப்பட்டு இருக்கிறது.
