விவசாயிகளுக்கு முதல்வர் விஜய்யின் மெகா கிஃப்ட்!

தமிழக விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில், முதல்வர் விஜய் ஒரு அதிரடியான சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளார். டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை சாகுபடியை ஊக்குவிப்பதற்காக, 134 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ‘குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை’ அவர் வெளியிட்டுள்ளார். வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதியான இன்று பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம்.

ஆனால், தற்போது தென்மேற்குப் பருவமழை தாமதமாவதாலும், ‘எல்நினோ’ தாக்கத்தால் மழை அளவு குறைய வாய்ப்புள்ளதாலும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடிக்கும் குறைவாகவே உள்ளது. இதனால் அணை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள சூழலில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முதல்வர் இந்தத் திட்டத்தை உடனடியாக அறிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமாக, விவசாயிகளுக்குத் தினமும் 18 மணிநேரம் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்துள்ளார். மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால், நிலத்தடி நீரைப் பயன்படுத்தி வடிமுனைக் குழாய்க் கிணறுகள் மூலம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.

குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 3.55 லட்சம் ஏக்கர் நிலங்களில் இதன் மூலம் தடையின்றிச் சாகுபடி செய்ய முடியும். மின்சாரத்துடன் மட்டுமல்லாமல், உரம் மற்றும் விதைகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதையும் அரசு உறுதி செய்துள்ளது. இதற்காக 10 ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான நெல் விதைகள் மற்றும் 4 லட்சம் மெட்ரிக் டன் உரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இந்த 134 கோடி ரூபாய் நிதியானது பல பிரிவுகளாகப் பிரித்து வழங்கப்படுகிறது. இதன்படி, நெல் இயந்திர நடவு, நேரடி நெல் விதைப்பு ஆகியவற்றிற்கான ஊக்கத்தொகை, உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரக்கலவைகள் விவசாயிகளுக்குச் சென்றடையும். மேலும், பாசன வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகள் சுமார் 97 சதவீதம் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதால், நீர் மேலாண்மை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் மட்டுமல்லாது கடலூர், திருச்சி, அரியலூர் போன்ற டெல்டா அல்லாத மாவட்டங்களில் கார், குறுவை மற்றும் சொர்ணவாரிப் பருவங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளும் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைய முடியும்.

மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதுமே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தரமான விதைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நெல் உற்பத்தித் திறனை அதிகரிக்க முடியும் என்று அரசு நம்புகிறது. இக்கட்டான இந்தச் சூழலில் விவசாயிகளுக்குத் துணையாக நிற்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த 18 மணிநேர மின்சாரத் திட்டம் மற்றும் நிதி உதவிகளை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related News

Latest News