ஐடி துறையில் வேலை பார்த்தாலே ஒரு தனி கெத்து, கைநிறைய சம்பளம், பாதுகாப்பான எதிர்காலம் – இதுதான் பல காலமாக நம் ஊரில் இருந்த ஒரு பிம்பம். ஆனால், இந்த ஒட்டுமொத்த நம்பிக்கையையும் அடியோட தகர்த்து எறிவது போல ஒரு அதிர்ச்சியான செய்தியைச் சொல்லி ஐடி ஊழியர்களைக் கலங்க வைத்துள்ளார் டெஸ்லா அதிபர் எலான் மஸ்க்.
ஒரு காலத்தில் கோடிங் தெரிந்திருந்தால் போதும், வாழ்க்கை செட்டில் என்று இருந்த நிலை மாறி, இப்போது அந்த கோடிங் வேலையையே AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மொத்தமாக காலி செய்யப் போகிறது என்பதுதான் அந்த அதிரடித் தகவல். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய எலான் மஸ்க், “இந்த ஆண்டு இறுதிக்குள் நிலைமை முற்றிலும் மாறிவிடும், இனிமேல் மனிதர்கள் கஷ்டப்பட்டு கோடிங் எழுத வேண்டிய அவசியமே இருக்காது” என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.
பொதுவாக மனிதர்கள் ஜாவா அல்லது பைத்தான் போன்ற மொழிகளில் கோடிங் எழுதுவார்கள், அதை கம்ப்யூட்டருக்கு புரியும் மொழியான ‘பைனரி’ எனப்படும் 0 மற்றும் 1-ஆக மாற்ற ஒரு சாப்ட்வேர் தேவைப்படும். ஆனால் எலான் மஸ்க் என்ன சொல்கிறார் என்றால், இனி AI நேரடியாகக் கணினிக்குப் புரியும் அந்த பைனரி மொழியிலேயே மிகத் துல்லியமான சாப்ட்வேர்களை உருவாக்கிவிடும். இதன் மூலம் மனிதர்கள் கோடிங் எழுதும் வேலையே இல்லாமல் போய்விடும் என்கிறார் அவர்.
இது ஏதோ வெறும் கணிப்பு மட்டும் கிடையாது, ஏற்கனவே ஐடி துறையில் இதன் தாக்கம் தெரிய ஆரம்பித்துவிட்டது. உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்ட அறிக்கையின்படி, சாப்ட்வேர் துறையில் ஆரம்ப நிலை வேலைவாய்ப்புகள் ஏற்கனவே 35 சதவீதம் வரை சரிந்துவிட்டன. பெரிய நிறுவனங்கள் இப்போது ஜூனியர் புரோகிராமர்களை வேலைக்கு எடுப்பதற்குப் பதிலாக, கிளாட் கோட் மற்றும் ஓபன் ஏஐ போன்ற அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தி வேலைகளை முடிக்கத் தொடங்கிவிட்டன.
ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் சிஇஓ டாரியோ அமோடி இன்னும் ஒருபடி மேலே போய், இந்த AI தொழில்நுட்பத்தால் ஒயிட் காலர் வேலைகளில் பாதிக்கும் மேற்பட்டவை அழியக்கூடும் என்றும், வேலையில்லாத் திண்டாட்டம் 20 சதவீதம் வரை உயரக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.
ஆனால், இதற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. தொழில்நுட்பம் என்பது எப்போதுமே பழைய வேலைகளைப் பறித்துவிட்டுப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்பதுதான் வரலாறு. எனவே, கோடிங் தெரிந்திருப்பது மட்டும் இனி போதாது; மாறாக, வளர்ந்து வரும் இந்த AI கருவிகளைப் பயன்படுத்தி எப்படி ஒரு சிக்கலான பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்ற திறமையை வளர்த்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். தொழில்நுட்பம் மாறும்போது நாமும் நம்மை மாற்றிக்கொண்டால் மட்டுமே இந்த டிஜிட்டல் உலகில் நிலைத்து நிற்க முடியும்.
