திமுக உள்கட்சி அரசியலில் தற்போது ஒரு மிகப்பெரிய அதிகாரப் போர் தொடங்கியுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவிற்குப் பிறகு, கட்சியில் அதிரடி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
குறிப்பாக, திமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவிகளின் எண்ணிக்கையை உயர்த்தி, தென் மண்டலத்தைச் சேர்ந்த ஒரு வலிமையான நபருக்கு அந்தப் பொறுப்பை வழங்கத் தலைமை முடிவெடுத்துள்ளது.
இந்தப் பதவிக்காகத் தற்போது முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அப்பாவு ஆகிய இருவருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருவதுதான் அறிவாலயத்தின் தற்போதைய ஹாட் நியூஸ்.
கடந்த இரண்டு மாதங்களாகவே இந்தப் பதவியைக் குறிவைத்து அனிதா ராதாகிருஷ்ணன் மிகத் தீவிரமாகக் காய்களை நகர்த்தி வந்தார். தூத்துக்குடி மாவட்ட அரசியலில் தனது பிடியை இன்னும் பலப்படுத்தவும், தென் மண்டலத்தில் ஒரு முக்கியத் தலைவராக உருவெடுக்கவும் அவர் இந்த வாய்ப்பை ஒரு துருப்புச் சீட்டாகக் கருதினார்.
ஆனால், அனிதா ராதாகிருஷ்ணனுக்குப் பதிலாக அப்பாவுவிற்கு அந்தப் பதவியை வழங்கலாம் என கனிமொழி எம்பி ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இதற்கு உதயநிதி ஸ்டாலினும் தனது சம்மதத்தைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுவதால், அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு தற்போது கடும் விரக்தியில் ஆழ்ந்துள்ளது.
இந்த அதிகார மோதல் தூத்துக்குடி மாவட்ட அரசியலிலும் பல அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மத்திய மாவட்டம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டால், அதன் பொறுப்பைக் கைப்பற்ற மார்க்கண்டேயன் தீவிரமாக முயன்று வருகிறார். இதன் ஒரு பகுதியாகவே முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனை ஓரங்கட்டும் முயற்சிகளும் ஒருபுறம் நடைபெற்று வருகின்றன.
இத்தகைய சூழலில், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராகக் கனிமொழி மற்றும் உதயநிதி எடுத்துள்ள இந்த ஒருமித்த முடிவு, தென் மாவட்ட திமுக நிர்வாகிகள் மத்தியில் ஒரு மிகப்பெரிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.
ஏற்கனவே அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் பணிகளை முன்னின்று நடத்தி வரும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு, கட்சித் தலைமை இறுதியில் உரிய அங்கீகாரம் வழங்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஒருபுறம் தேர்தலுக்காகக் கடுமையாக உழைத்து வரும் வேளையில், மறுபுறம் முக்கியப் பதவிகள் கைநழுவிப் போவது அவருக்குப் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள அந்த முப்பெரும் விழாவில், திமுகவின் இந்த உள்கட்சிப் பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா அல்லது புதிய மோதல்கள் வெடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
