இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு… எங்கெங்கே தெரியுமா?

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பரவலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு கடலோர தமிழகத்தின் மேல் சுமார் 3.1 கிலோமீட்டர் உயரத்தில் மற்றும் தெற்கு கடலோர ஆந்திரப் பகுதிகளின் மேல் 5.8 கிலோமீட்டர் உயரத்தில் வளிமண்டல சுழற்சிகள் நிலவுகின்றன. மேலும், வடக்கு கடலோர தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதையும் உருவாகியுள்ளது.

இதன் தாக்கத்தால் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட உள் தமிழகப் பகுதிகள் மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மலைப்பகுதிகள், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாளும் இதே நிலை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 15-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா பகுதிகள் மற்றும் தென் தமிழகத்தின் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 16 முதல் 18 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் ஜூன் 16 வரை மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News