“எங்களுக்கு அட்வைஸ் பண்ணாதீங்க!”.. ரஷ்யா விவகாரத்தில் அமெரிக்காவை வெளுத்து விட்ட இந்தியா!

உலக நாடுகளின் விமர்சனங்களுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது பாணியில் கொடுத்துள்ள அதிரடிப் பதிலடிதான் இப்போது இணையத்தின் டாப் ட்ரெண்டிங். உக்ரைன் போர் தொடங்கிய காலத்திலிருந்தே ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை மேலை நாடுகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பின்லாந்து நாட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஜெய்சங்கர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் இரட்டை வேடத்தைப் புள்ளிவிவரங்களோடு பிரித்து மேய்ந்துள்ளார். இதில் ஹைலைட் என்னவென்றால், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை விமர்சித்த அதே அமெரிக்காதான், இப்போது உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிடக் கூடாது என்பதற்காக ‘நீங்க ரஷ்ய எண்ணெய்யைத் தொடர்ந்து வாங்குங்க’ என்று இந்தியாவிடம் ரகசியமாகக் கேட்டுக் கொண்டதாம். இந்த ‘பல்டி’ அரசியலைத்தான் ஜெய்சங்கர் இப்போது உலக அரங்கில் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார்.

போர் தொடங்கியதும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எண்ணெய்யைப் புறக்கணிப்பதாகப் பில்டப் கொடுத்தன. ஆனால், இந்தியா வழக்கமாக எண்ணெய் வாங்கும் மத்திய கிழக்கு நாடுகளின் விநியோகத்தை ஐரோப்பா மொத்தமாகத் தட்டிப் பறித்தது. இதனால் இந்தியாவுக்குக் கிடைக்க வேண்டிய பங்கு பாதிக்கப்பட்டபோது, வேறு வழியின்றி இந்தியா ரஷ்யாவை நோக்கிச் செல்ல வேண்டிய சூழல் உருவானது.

அப்போது இந்தியா மீது 50 சதவீத வரி விதித்து மிரட்டிய அமெரிக்கா, இப்போது மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தால் எண்ணெய் விலை ஏறிவிடக்கூடாது என்பதற்காகத் தனது தடைகளைத் தானே தளர்த்தியுள்ளது. இதைச் சுட்டிக்காட்டிய ஜெய்சங்கர், “முதலில் வரி போடுவது, பிறகு விலக்கு அளிப்பது என அமெரிக்காவே ஒரு குழப்பத்தில்தான் இருக்கிறது; இதில் எங்களுக்கு யாரும் அட்வைஸ் செய்யத் தேவையில்லை” எனச் செம்மையாகச் சாடியுள்ளார்.

மேலும், இந்தியாவை விரல் நீட்டிக் குற்றம் சாட்டும் ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் வைத்த செக் இன்னும் அதிரடியானது. “இந்திய ஆயுதங்களால் இதுவரை எந்த ஐரோப்பிய நாடும் தாக்கப்பட்டதில்லை, ஆனால் நீங்கள் விற்கும் ஆயுதங்களால்தான் இந்தியா பல ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டு வருகிறது” என அவர்களின் ஆயுத வியாபார முகத்திரையைத் தோலுரித்துள்ளார். ஐரோப்பாவின் பாதுகாப்பு என்பது இந்தியாவின் பொறுப்பு அல்ல என்றும், இந்தியாவின் எரிசக்தித் தேவையே நமக்கு முக்கியம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இறுதியாக, “அமெரிக்கா விலக்கு அளித்தாலும் அளிக்காவிட்டாலும், எங்களது நாட்டின் லாபத்தின் அடிப்படையிலேயே எங்கள் முடிவு அமையும்” என இந்திய அதிகாரிகள் எடுத்துள்ள இந்த ‘கெத்தான’ முடிவு, சர்வதேச அரங்கில் இந்தியாவின் இறையாண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறது.

Related News

Latest News