இந்தியன் ஆயில், பிபிசிஎல், எச்பிசிஎல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர் விநியோகம் மற்றும் புக் செய்யும் முறையில் மாற்றங்களை கொண்டு வர வாய்ப்புள்ளது. மே 1ஆம் தேதி இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மத்திய அரசு எல்பிஜி சிலிண்டர் விலையை எரிவாயு இறக்குமதி விலை, சுத்திகரிப்பு நிறுவனங்களின் செலவுகள் ஆகியவைற்றை கணக்கில் கொண்டு மாற்றி வரும் வேளையில், மே 1 ஆம் தேதி சிலிண்டர் விலை உயர்வோடு, புக்கிங் விதிமுறைகளிலும் மாற்றம் நிகழுமா என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது .மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த விளக்கத்தின் மூலம் LPG விலை உயராது என கருதினாலும் , சிலிண்டர் விலை குறித்து எவ்விதமான அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை.
அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் தொடங்கிய பிறகு, 14.2 கிலோ சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது. 19 கிலோ வணிக சிலிண்டர் விலை மார்ச் மாதத்தில் மட்டும் மூன்று முறை உயர்த்தப்பட்டது.தற்போது நகர்ப்புறங்களில் 25 நாட்கள்,கிராமப்புறங்களில் 45 நாட்கள் இடைவெளியில் சிலிண்டர் புக் செய்ய முடிகிறது. இந்த லாக்-இன் காலத்தை மேலும் மாற்றும் திட்டத்தை மத்திய அரசு மே1ஆம் தேதி அறிவிக்கலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் ஓடிபி அடிப்படையிலான விநியோக முறையை நிரந்தரமாக்கவும் நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன.
புதிய விதிமுறைகள் அறிவிக்கப்படும் வரை, LPG சிலிண்டரை தேவைக்கு ஏற்ப முன்கூட்டியே புக் செய்து வைத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றனர். விலை உயர்வு மற்றும் விநியோக மாற்றங்கள் குடும்ப செலவுகளை பாதிக்கக்கூடும் என்பதால், எரிவாயு சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
