நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான NEET நுழைவுத் தேர்வு அடுத்த மாதம் மே 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த முக்கியமான தேர்வை எழுத தமிழகத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் உட்பட, நாடு முழுவதும் 28 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். மாணவர்கள் பலரும் டாக்டராக வேண்டும் என்ற கனவுடன் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர்.
இந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை, தேர்வு மையங்கள், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் அதை பதிவிறக்கம் செய்ய அதிகாரப்பூர்வ இணையதளமான nect.nta.nic.in-ஐ எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால், கடைசி நேரத்தில் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்பிற்கான NEET தேர்வின் ஹால் டிக்கெட் வெளியீடு ஏப்ரல் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. முன்பு வெளியிடப்பட்ட அறிவிப்பை மாற்றி இந்த புதிய தேதி அறிவிக்கப்பட்டதால், மாணவர்கள் மத்தியில் சிறிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்ந்து கவனித்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள விவரங்களை சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு நாளை முன்னிட்டு தேவையான ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், வழிமுறைகளை கவனமாக பின்பற்றவும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
