‘கப்பல்கள் மீது தாக்குதல்..’ ஐநாவை அதிரவைத்த இந்தியா!

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா விடுத்துள்ள ஒரு அதிரடி எச்சரிக்கை இப்போது ஒட்டுமொத்த உலக நாடுகளையும் உற்றுநோக்க வைத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சரக்குக் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை இந்தியா “ஏற்றுக்கொள்ளவே முடியாது” என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளது.

ஐநா-வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி தூதர் ஹரிஷ் பி, இந்த விவகாரத்தில் இந்தியாவின் கவலையை உலக அரங்கில் உரக்கப் பதிவு செய்துள்ளார். ஒருபுறம் நாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதும், அதற்கு அப்பாவி சரக்குக் கப்பல்களை இலக்காக மாற்றுவதும் எந்த விதத்தில் நியாயம்? என்ற இந்தியாவின் கேள்விக்கு ஐநா சபையே ஒரு நிமிடம் மௌனமாகியுள்ளது.

இந்த ஹார்முஸ் ஜலசந்தி என்பது ஏதோ ஒரு சாதாரண கடல் பாதை அல்ல; இதுதான் இந்தியாவின் எரிசக்தி மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பின் உயிர்நாடி. இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தேவையின் பெரும்பகுதி இந்தப் பாதை வழியாகத்தான் வந்து சேருகிறது.

இங்கே கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டாலோ அல்லது தாக்கப்பட்டாலோ, அதன் நேரடித் தாக்கம் நமது நாட்டில் உள்ள பெட்ரோல், டீசல் விலை மற்றும் தொழிற்சாலைகளின் உற்பத்தியில் எதிரொலிக்கும். “நிதானமாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்களைப் போர்க்களமாக மாற்றுவது அராஜகம்” என்று இந்தியா எச்சரித்துள்ளது.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய மிகவும் உருக்கமான விஷயம் என்னவென்றால், இந்த மோதல்களால் நமது இந்திய மாலுமிகள் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். “நமது இந்திய மாலுமிகளின் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோயுள்ளன” என்று தூதர் ஹரிஷ் குறிப்பிட்டபோது ஐநா சபையில் ஒருவித நிசப்தம் நிலவியது.

பிப்ரவரி 28, 2026 முதல் ஈரான் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றம், கடல்வழிப் போக்குவரத்தைப் பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது. சர்வதேச சட்டங்கள் காலில் போட்டு மிதிக்கப்படுவதை இந்தியா ஒருபோதும் வேடிக்கை பார்க்காது என்பதையும் அவர் தனது பேச்சில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

உலகப் பொருளாதாரத்தைச் சிதைக்கும் இந்தத் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும் என்றும், ஹார்முஸ் ஜலசந்தியில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை மீண்டும் உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்தியா உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஒருபுறம் ராணுவ ரீதியான பலத்தைக் காட்ட நினைக்கும் நாடுகளுக்கு மத்தியில், “பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மட்டுமே தீர்வைத் தரும்” என்று இந்தியா காட்டியுள்ள வழி, ஒரு முதிர்ந்த வல்லரசுக்கான அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இந்த அதிரடிப் பேச்சு, மத்திய கிழக்கு அரசியலில் எந்த மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News