காதலியை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த கடற்படை அதிகாரி

ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில், கள்ளக்காதல் தொடர்பான தகராறு காரணமாக ஒரு இந்திய கடற்படை அதிகாரி தனது காதலியை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் மறைத்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கடற்படையில் பணியாற்றி வந்தவர் சிந்தடா ரவீந்திரா (30). இவருக்கும் போலிப்பள்ளி மௌனிகா (31) என்பவருக்கும் 2021-ம் ஆண்டு டேட்டிங் செயலி மூலம் அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் இந்த நட்பு காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.

2024-ம் ஆண்டு ரவீந்திரா மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகும் மௌனிகாவுடன் உறவு தொடர்ந்தது. ஆனால், காலப்போக்கில் இருவருக்கும் இடையே சச்சரவு அதிகரித்தது.

மௌனிகா தன்னிடமிருந்து சுமார் 3.5 லட்சம் ரூபாய் பெற்றதாகவும் அதை திருப்பித் தரவில்லை என்றும் ரவீந்திரா கூறியுள்ளார். மேலும், அவர்களுடைய உறவை ரவீந்திராவின் மனைவியிடம் தெரிவிப்பேன் என்று மௌனிகா மிரட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த ரவீந்திரா கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

சம்பவத்திற்கு முன், ரவீந்திராவின் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மௌனிகாவை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அன்று இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் கோபமடைந்த ரவீந்திரா, மௌனிகாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், ஆன்லைன் மூலம் கத்தி வாங்கி, உடலை பல துண்டுகளாக வெட்டியுள்ளார்.

உடல் பாகங்களை பிரித்து, சிலவற்றை பிரிட்ஜில் வைத்தும், சிலவற்றை ட்ராலி பேக்கில் வைத்தும் மறைத்துள்ளார். மேலும், தலை மற்றும் கைகளை வேறு இடத்திற்கு கொண்டு சென்று எரித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ரவீந்திரா தானாகவே போலீசில் சரணடைந்தார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், போலீசார் வீட்டில் சோதனை நடத்தியபோது பிரிட்ஜில் உடல் பாகங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

ரவீந்திரா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மௌனிகாவின் காணாமல் போன உடல் பாகங்களைத் தேடும் பணியில் தனிப்படை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related News

Latest News