இரவில் தூங்கிய குழந்தை… காலையில் சடலமாக மீட்பு!! இடையில் என்ன நடந்தது? திகிலூட்டும் உண்மை!!

ராமநாதபுரம் எம்எஸ்கே நகர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம், அப்பகுதி மக்களை மட்டுமல்லாமல் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிக்க தாத்தா வீட்டிற்கு வந்த ஐந்து வயது சிறுமி, மறுநாள் காலை உயிரிழந்த நிலையில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த பாலகணேஷ்–செல்வி தம்பதியினரின் ஐந்து வயது இரட்டையர் மகள்கள் சாய் தீப்தி மற்றும் சாரு நித்திகா. வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு செல்வி, ராமநாதபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழித்த குழந்தைகள், இரவு உணவுக்குப் பிறகு அனைவருடனும் வீட்டில் உறங்கினர்.

அதிகாலை நேரத்தில் வீட்டுக்குள் அதிக புழுக்கமாக இருந்ததால், முன்பக்க கதவை திறந்துவிட்டு மீண்டும் தூங்கியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். காலை எழுந்தபோது, இரட்டையரில் ஒருவரான சாய் தீப்தி மட்டும் காணாமல் போனது அனைவரையும் பதற்றத்தில் ஆழ்த்தியது.

உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், உடனடியாக ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். வீடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அருகில் உள்ள ஒரு வீட்டின் கிணற்றில் சிறுமி உயிரிழந்த நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, கிணற்றிலிருந்து சிறுமியின் உடலை மீட்டனர். பின்னர் உடல், உடற்கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மகளின் உடலைக் கண்ட பெற்றோர் கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்தச் சம்பவத்தில் முக்கியமான சந்தேகத்தை ஏற்படுத்தியது, சிறுமி மீட்கப்பட்ட கிணற்றின் அமைப்புதான். கிணற்றைச் சுற்றி உயரமான பாதுகாப்புச் சுவர் இருந்ததாக கூறப்படுவதால், ஐந்து வயது குழந்தை தானாகவே அந்தக் கிணற்றுக்குள் விழுந்திருக்க வாய்ப்பு குறைவா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், போலீசார் இதை சாதாரண விபத்தாகக் கருதாமல், சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் நடந்த பகுதி முழுவதும் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன. சம்பவ நேரத்தில் யாரேனும் வீட்டின் அருகே வந்தார்களா, சிறுமி தனியாக வெளியே சென்றாரா அல்லது வேறு ஏதேனும் மர்ம பின்னணி உள்ளதா என்பதையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில், தகவலறிந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜு மருத்துவமனைக்கு சென்று சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இந்த நிலையில், போலீஸ் விசாரணையில், தூங்கிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சிறுமியின் தாய் மாமாவின் மனைவி சபரிகா (21) சிறுமியை பொறாமையில் கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிக்க வந்த ஒரு சிறுமியின் உயிரிழந்த இந்தச் சம்பவம், ராமநாதபுரம் முழுவதும் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News