இந்தப் பழக்கங்கள் கிட்னியை கொஞ்சம் கொஞ்சமாக காலி செய்யும்

சிறுநீரகங்கள் உடலிலிருந்து நச்சுக்களை வடிகட்டி வெளியேற்றும் மிக முக்கியமான உறுப்புகளாகும். ஆனால், நாம் தினசரி செய்து வரும் சில சாதாரண பழக்கங்களே அறியாமலேயே சிறுநீரகங்களை மெதுவாக சேதப்படுத்தி, பின்னர் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

முக்கியமாக, போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது சிறுநீரகங்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உடலில் நச்சுகள் தேங்கி, சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம் அதிகரிக்கிறது. அதேபோல், நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது சிறுநீரகங்களில் அழுத்தத்தை கூட்டி, சிறுநீரக தொற்று (UTI) மற்றும் கல் உருவாகும் பிரச்சனைகளுக்கு காரணமாகிறது.

தினசரி உணவில் அதிக உப்பு, ஊறுகாய், பாக்கெட் உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வது ரத்த அழுத்தத்தை உயர்த்தி, சிறுநீரகங்களின் செயல்பாட்டை பாதிக்கிறது. மேலும், மருத்துவர் ஆலோசனை இல்லாமல் அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக்கொள்வது சிறுநீரக திசுக்களுக்கு நேரடி சேதத்தை ஏற்படுத்தி, நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பை உருவாக்கும் அபாயம் உள்ளது.

இதற்குட்பட, காலை உணவை தவிர்ப்பது மற்றும் போதிய தூக்கம் இல்லாமல் இருப்பதும் உடலின் மாற்றச்செயல்முறையை பாதித்து, நச்சுகள் சரியாக வெளியேறாமல் சிறுநீரகங்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது.

அதிக சர்க்கரை கொண்ட பானங்கள் மற்றும் குளிர்பானங்களை தொடர்ந்து அருந்துவது, அதிக புரத உணவுகளை கட்டுப்பாடின்றி எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை, புகைபிடித்தல் மற்றும் மதுபானம் போன்ற பழக்கங்களும் சிறுநீரக ஆரோக்கியத்தை தீவிரமாக பாதிக்கின்றன.

குறிப்பாக, நீரிழிவு (Diabetes) மற்றும் உயர் ரத்த அழுத்தம் (High Blood Pressure) உள்ளவர்கள் வாழ்க்கை முறையில் கவனம் செலுத்தாவிட்டால், சிறுநீரக பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

அதேபோல், நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் பழக்கம் மற்றும் உடல் எடை அதிகரிப்பும் சிறுநீரக செயல்பாட்டை குறைக்கிறது. எனவே, சிறுநீரகங்களை பாதுகாக்க தினமும் குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது, உப்பின் அளவை கட்டுப்படுத்துவது, சமநிலையான உணவுமுறையை பின்பற்றுவது மற்றும் தினசரி உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம்.

Related News

Latest News