மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சி விற்பனைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
வரும் 31-ஆம் தேதி மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி, பொதுமக்கள் அமைதியான சூழலில் இந்த விழாவை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த உத்தரவின் படி, மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் ஆடு, மாடு, கோழி, பன்றி உள்ளிட்ட அனைத்து வகையான இறைச்சி விற்பனையும் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த நாளில் எந்த இறைச்சிக் கடைகளும் திறக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி செயல்படும் கடைகளில் இறைச்சி பறிமுதல் செய்யப்படும். மேலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
மேலும், இந்த தடை சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
