‘ஈரானை ஒட்டுமொத்தமா அழிக்க போறோம்!’ வெறியாட்டத்தை தொடங்கி நடுங்கவைத்த டிரம்ப்!

மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் மேகங்கள் தற்போது ஒரு மிகப்பயங்கரமான நிலையை எட்டியுள்ளன. ஈரான் உடனடியாகப் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை என்றால், அந்த நாட்டின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பையும் சிதைத்துவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகக் கடுமையான இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார். ‘ஃபாக்ஸ் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் பேசிய டிரம்ப், இன்று இரவு, நாளை மற்றும் அதற்கு அடுத்த இரவு எனத் தொடர்ந்து ஈரானின் ராணுவ இலக்குகள் மீது மிகக் கடுமையானத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல்கள் வெறும் ஆரம்பம் மட்டுமே என்றும், அடுத்த வாரம் முதல் ஈரானின் நிலைமை இன்னும் மோசமாக மாறும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஈரான் அரசுப் பேச்சுவார்த்தை மேசைக்கு வர மறுக்கும் பட்சத்தில், அடுத்த வாரம் முதல் அந்த நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

“ஈரானின் அனைத்து மின் நிலையங்களையும் நாங்கள் முடக்குவோம், அவர்களின் போக்குவரத்துப் பாலங்களைத் தரைமட்டமாக்குவோம்” என்று ஆவேசமாகப் பேசிய டிரம்ப், அந்த நாட்டின் எரிசக்தி நிலையங்களை இப்போதைக்குத் தாக்காமல் விட்டு வைத்துள்ளதாகவும், ஆனால் ஈரான் பிடிவாதம் பிடித்தால் இறுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்களும் தப்பாது என்றும் கூறியுள்ளார்.

ஈரானை ஒரு சிதைந்த நாடாக மாற்றுவதை அமெரிக்கா விரும்பவில்லை என்றாலும், அந்த நாட்டின் அணு ஆயுத முயற்சி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தடுக்க இந்த அதிரடி நடவடிக்கைகள் அவசியம் என்று அவர் வாதிட்டுள்ளார். ஈரானின் ரகசிய அணுசக்தி நிலையங்கள் குறித்தும் டிரம்ப் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

குறிப்பாக ‘பிகாக்ஸ் மவுண்டன்’ (Pickaxe Mountain) பகுதியில் அமைந்துள்ள நிலத்தடி அணுசக்தி தளம் மற்றும் தெஹ்ரான் அருகே உள்ள ‘தாலேகன்’ (Taleghan) அணுசக்தி மையம் ஆகியவற்றை அமெரிக்கப் படைகள் மிக நெருக்கமாகக் கண்காணித்து வருவதாக அவர் கூறியுள்ளார். ஏற்கனவே தாக்குதலுக்கு உள்ளாகி தற்போது சரிசெய்யப்பட்டு வரும் இந்த மையங்களை அமெரிக்காவால் மிக எளிதாக மீண்டும் அழிக்க முடியும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

ஈரானின் ரகசியத் திட்டங்கள் ஒவ்வொன்றும் அமெரிக்காவின் ரேடாரில் இருப்பதாகவும், தேவைப்படும் பட்சத்தில் எந்த நேரத்திலும் அவற்றைத் தகர்க்கத் தயாராக இருப்பதாகவும் டிரம்ப் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இந்த மோதலில் அமைதி திரும்புவதற்கான வாய்ப்புகள் தற்போது மிகக் குறைவாகவே தெரிகின்றன. ஈரான் மீது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்ற கேள்விக்கு, “எனக்கு இப்போது அதில் ஆர்வமில்லை” என்று டிரம்ப் அதிரடியாகப் பதிலளித்துள்ளார்.

கடந்த வார இறுதியில் எட்டப்பட்ட ஒரு ரகசிய ஒப்பந்தத்திலிருந்து ஈரான் தன்னிச்சையாகப் பின்வாங்கியதே இதற்குக் காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஈரானின் இந்தத் துரோகத்திற்குப் பிறகு, பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை என்றும், இனித் தாக்குதல்கள் மூலமாகவே பதிலடி கொடுக்கப்படும் என்றும் அமெரிக்கா உறுதியாகத் தெரிவித்துள்ளது. வல்லரசு நாடுகளின் இந்த நேரடி மோதல் உலகளாவிய பொருளாதாரத்திலும், எரிபொருள் விலையிலும் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் தற்போது உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.

Related News

Latest News