இந்திய தபால் துறை 1854 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, நாடு முழுவதும் அஞ்சல் சேவை மற்றும் பார்சல் விநியோகத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. உலகின் மிகப் பழமையான தபால் அமைப்புகளில் ஒன்றாக விளங்கும் இது, காலத்திற்கு ஏற்ப பல புதிய சேவைகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது.
விரைவு தபால் சேவை, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் போன்றவற்றை ஏற்கனவே செயல்படுத்தி வரும் தபால் துறை, தற்போது புதிய முயற்சியாக 24 மணி நேரத்தில் டெலிவரி செய்யக்கூடிய அதிவிரைவு தபால் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையின் மூலம் முக்கியமான கடிதங்கள் மற்றும் ஆவணங்களை அடுத்த நாளே அனுப்ப முடியும். குறிப்பாக அரசு தொடர்பான அவசர தகவல் பரிமாற்றங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய சேவை முதற்கட்டமாக டெல்லி, கொல்கத்தா, சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் இது படிப்படியாக பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
தனியார் கூரியர் நிறுவனங்களுக்கு போட்டியாக இந்த சேவை அமையும் என கூறப்படுகிறது. மேலும், குறைந்த கட்டணத்தில் விரைவான சேவை கிடைப்பதால், வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனுடன், 48 மணி நேரத்தில் டெலிவரி செய்யக்கூடிய பிரீமியம் தபால் சேவையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
