குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் கம்பாலா கிராமத்தைச் சேர்ந்த சோனு ரபாரி (19) மற்றும் நவீன் ஜீவாபாய் (21) என்ற இளைய ஜோடி காதலித்து வந்தனர். இதற்கு சோனு ரபாரியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
கடந்த பிப்ரவரி 3-ம் தேதி, இளம்பெண்-காதலன் காணாமல் போனதாக நாகத்ரானா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
விசாரணையின் போது, போலீசாருக்கு சோனு ரபாரியின் குடும்பத்தினருக்கு சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் வந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், சோனுவின் தந்தை, தம்பி மற்றும் உறவினர் ஒருவர் சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்டதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
சம்பவ நாளில், இவர்கள் சோனு மற்றும் நவீனை ஆள் நடமாட்டமற்ற இடத்திற்கு கொண்டு சென்று, காதலை கைவிடுமாறு மிரட்டினர். ஆனால் காதல் ஜோடி மறுப்பு தெரிவிப்பதால், கோபமடைந்த குடும்பத்தினர் இருவரின் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் இருவரின் உடல்களை அருகிலுள்ள கிணற்றில் வீசியுள்ளனர்.
பின்னர், தங்கள் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, மகளை காணவில்லை என போலீசில் போலி புகார் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட கிணற்றில் இருந்து இருவரின் சடலங்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக சோனுவின் தந்தை, தம்பி மற்றும் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சோனுவின் தாயும் இதில் உடன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
