சிலிண்டர் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த 66 வயது முதியவர் உயிரிழப்பு

பஞ்சாப் மாநிலத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த 66 வயது முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் இறக்குமதி தடைபட்டு, கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. இதை சமாளிக்க, மத்திய அரசு வணிக உபயோக சிலிண்டர்களின் விநியோகம் முதல் கட்டமாக நிறுத்திய நிலையில், வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் சீராக விநியோகிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம், பர்னாலா மாவட்டம், செஹ்னாவில் வீட்டு உபயோக சிலிண்டர் வாங்குவதற்காக வெள்ளிக்கிழமை காலை நீண்ட வரிசையில் காத்திருந்த 66 வயது பூஷன் குமார் மித்தல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவர் சிலிண்டர் விநியோகிக்கும் நிறுவனத்திற்கு இரண்டு நாள்களாக அலைந்து, வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கே டோக்கன் பெற்றிருந்தார்.

சுமார் 130க்கும் மேற்பட்டோருக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், இரண்டு மணி நேரம் காத்திருந்த பூஷன் மாரடைப்பை ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாலும், அவர் உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related News

Latest News