புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டால் மட்டுமே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்குவோம் என என்.ஆர். காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியாக ஆட்சி செய்து வருகின்றன. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது கூட்டணி பேச்சுவார்த்தைகளில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதே என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. அந்த கோரிக்கையை முன்வைத்தே அவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தனர்.
ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியத்தில் பாஜக ஆட்சி செய்தபோதிலும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. இதுவரை புதுச்சேரி அரசு சார்பில் மாநில அந்தஸ்து கோரி 13 முறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கினால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று என்.ஆர். காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
