தகாத உறவில் இருந்த அக்காவை துடிதுடிக்க கொலை செய்த தம்பி

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. அவரது மகள் சண்முகத்தாய் என அழைக்கப்படும் சுமித்ரா (35). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஒரு ஆண்டாக அவர் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சுமித்ரா சிலருடன் ஒழுக்கக்கேடான உறவில் இருப்பதாக அவரது தம்பி, புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த முத்துராஜாவுக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் தனது அக்காவை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுகிறது என எண்ணிய முத்துராஜா, தனது அக்காவை கொலை செய்யத் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு, தனது நண்பர் வசந்துடன் இருசக்கர வாகனத்தில் சுமித்ராவின் வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டின் வாசலில் வசந்தை நிற்க வைத்துவிட்டு, உள்ளே சென்ற முத்துராஜா சுமித்ராவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், அவர் அரிவாளால் சுமித்ராவை பலமுறை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த சுமித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் முத்துராஜாவும் வசந்தும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த செய்துங்கநல்லூர் காவல்நிலையம் போலீசார் விரைந்து வந்து, சுமித்ராவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த முத்துராஜா மற்றும் வசந்தை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News