வானத்தில் ஒரு அரிய அதிசயத்தைக் காணத் தயாராகுங்கள்! நாளை மாலை, அதாவது பிப்ரவரி 28-ஆம் தேதி சனிக்கிழமை அன்று, சூரிய குடும்பத்தில் உள்ள ஆறு கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுக்கப் போகின்றன. ‘பிளானட்டரி பரேட்’ (Planetary Parade 2026) என்று அழைக்கப்படும் இந்த அரிய நிகழ்வு, இந்தியா முழுவதும் உள்ள மக்களால் வெறும் கண்ணாலேயே பார்க்க முடியும் என்பதுதான் கூடுதல் சிறப்பு.
நாளை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, அதாவது மாலை 6 மணி அளவில் மேற்கு திசையை நோக்கினால், புதன் (Mercury), வெள்ளி (Venus), வியாழன் (Jupiter) மற்றும் சனி (Saturn) ஆகிய நான்கு கிரகங்களை நீங்கள் தெளிவாகக் காணலாம். இவை தவிர யுரேனஸ் (Uranus) மற்றும் நெப்டியூன் (Neptune) ஆகிய கிரகங்களையும் வானில் காண முடியும். ஆனால், இவற்றைத் தெளிவாகப் பார்க்க பைனாகுலர் (Binoculars) அல்லது தொலைநோக்கி (Telescope) தேவைப்படும்.
இந்த அணிவகுப்பில் மிகவும் பிரகாசமாகத் தெரியப்போவது வியாழன் (Jupiter) கிரகம் தான். நட்சத்திரக் கூட்டங்களுக்கு இடையே மிகவும் பிரகாசமாக இது காட்சியளிக்கும். அதேபோல், மேற்கு அடிவானத்திற்கு அருகில் வெள்ளி (Venus) கிரகம் ஜொலிக்கும். இந்த கிரகங்களுக்கு மேலேயே சனி மற்றும் நெப்டியூன் ஆகியவையும், வானத்தின் சற்று உயரமான பகுதியில் யுரேனஸ் மற்றும் வியாழன் கிரகங்களும் அணிவகுத்து நிற்கும்.
வானத்தில் தெரிவது கிரகமா அல்லது நட்சத்திரமா என்று உங்களுக்குச் சந்தேகம் வந்தால், அதற்கு ஒரு எளிய வழி இருக்கிறது. வானில் தெரியும் அந்த ஒளிப்புள்ளி மின்னிக் கொண்டிருந்தால் அது நட்சத்திரம், அது மின்னாமல் நிலையாகப் பிரகாசித்தால் அது கிரகம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த அதிசய நிகழ்வைப் பார்க்க விரும்புபவர்கள், சூரியன் முழுமையாக மறைந்த 30 நிமிடங்களுக்குப் பிறகு மொட்டை மாடிக்கோ அல்லது திறந்தவெளி மைதானத்திற்கோ சென்று மேற்கு திசையை நோக்கினால் இந்த கிரகங்களின் சங்கமத்தைக் காணலாம். ஆனால் ஒரு எச்சரிக்கை, சூரியன் மறைவதற்கு முன்பே சூரியனை நேரடியாகப் பார்க்க முயற்சிக்காதீர்கள், அது கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் இந்த கிரகங்களின் அணிவகுப்பைத் தவறவிடாதீர்கள்.
