அமெரிக்கா, இஸ்ரேலுடன் போரில் ஈடுபட்டுள்ள ஈரான், ஒரு விசித்திரமான ராணுவத்தைக் கொண்டுள்ளது. ஒருபக்கம், பல தசாப்தங்கள் பழைமையான, காலாவதியான ஆயுதங்கள். மறுபக்கம், உலகையே அச்சுறுத்தும் அதிநவீன ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் ஹேக்கர்கள். இந்த பழையதும், புதியதும் கலந்த கலவைதான், ஈரானின் கணிக்க முடியாத ராணுவ பலத்தின் ரகசியமாகப் பார்க்கப்படுகிறது.
1979-ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்கு முன்பு வரை, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள்தான் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கி வந்தன. ஆனால், புரட்சிக்குப் பிறகு, உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்ட ஈரான், தற்சார்புப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. பழைய அமெரிக்க மற்றும் சோவியத் ஆயுதங்களை வைத்தே, தங்களது உள்நாட்டு ஆயுதத் தொழிற்சாலையை ஈரான் உருவாக்கியது.
ஆனால், பழைய தொழில்நுட்பத்தை மட்டும் ஈரான் நம்பியிருக்கவில்லை. வடகொரியாவின் உதவியுடன், தங்களது ஏவுகணைத் தொழில்நுட்பத்தை அபாரமாக மேம்படுத்தியது. மிகக் குறைந்த செலவில், அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய, திரும்பி வராத தற்கொலைத் தாக்குதல் ட்ரோன்களை உருவாக்குவதில் ஈரான் முன்னோடியாக மாறியது. இவற்றுடன், உலகின் எந்த மூலையில் இருந்தும் தாக்கக்கூடிய ‘சைபர் போர்முறை’ என்ற டிஜிட்டல் ஆயுதத்தையும் ஈரான் கையில் எடுத்துள்ளது.
ஈரானின் ராணுவம், உள்நாட்டுப் பாதுகாப்புப் படையான ‘ஆர்டேஷ்’ மற்றும் புரட்சிகரப் பாதுகாப்புப் படையான ‘IRGC’ என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில், IRGC படையே மிகவும் சக்தி வாய்ந்தது. இது, ஹிஸ்புல்லா போன்ற பினாமிப் படைகளுக்கு ஆயுதம் வழங்கி, மத்திய கிழக்கு முழுவதும் தனது செல்வாக்கை நிலைநாட்டுகிறது.
சமீபத்திய அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்கள் ஈரானின் பலத்தைக் குறைத்திருந்தாலும், அதன் முழுத் திறனும் இன்னும் மர்மமாகவே உள்ளது. ஏவுகணைத் தாக்குதல்களின் வேகம் குறைந்தாலும், ஒரு பெரும் ஆயுதக் கிடங்கை ஈரான் ரகசியமாகப் பதுக்கி வைத்திருக்கலாம் என ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.
