விஜய் தலைமையிலான தவெக அரசு, பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” என்ற புதிய காவல் பிரிவை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டிய விஜய், ஆட்சிக்கு வந்ததும் பெண்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டு, செயல்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அரசாணையின்படி, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கவும் இந்த சிறப்பு படை செயல்படும். டிஜிபி அலுவலகத்தின் கீழ் ஒரு நீதிபதி, ஒரு எஸ்பி, இரண்டு டிஎஸ்பிக்கள், நான்கு காவல் ஆய்வாளர்கள், எட்டு உதவி ஆய்வாளர்கள் மற்றும் பல அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்படும்.
முதற்கட்டமாக, இந்த படையின் ஐஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த படைக்கென தனித்துவமான சீருடையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருப்பு நிற தொப்பி, நேவி ப்ளூ அரைக்கை சட்டை, வெள்ளி நட்சத்திரங்கள், கருப்பு வெப் பெல்ட் மற்றும் காகி நிற கால்சட்டை உள்ளிட்ட அம்சங்களுடன் சீருடை உருவாக்கப்படுகிறது. பெண்கள் பாதுகாப்பில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது.
