தமிழ்நாட்டில் 21 நாட்களில் தொழில் அனுமதி… அமைச்சர் கீர்த்தனா அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்க விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு 21 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அறிவித்துள்ளார். தமிழக அரசின் தொழில் வழிகாட்டி நிறுவன அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட பிறகு அவர் வெளியிட்ட வீடியோவில், அரசு அலுவலகங்களில் கோப்புகள் தேங்குவது மற்றும் அனுமதிக்காக நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலையை மக்கள் விரும்புவதில்லை என்று தெரிவித்தார்.

தொழில் தொடங்குவதில் ஏற்படும் தாமதங்கள் அல்லது நிர்வாக சிக்கல்கள் குறித்து முதலீட்டாளர்கள் நேரடியாக புகார் தெரிவிக்கக்கூடிய வகையில், முதலமைச்சரும் தானும் இணைந்து கண்காணிக்கும் “நேரடி குறைதீர்க்கும் கட்டமைப்பு” உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இதன் மூலம் தொழில் தொடங்கும் செயல்முறைகள் மேலும் எளிதாகவும் வெளிப்படையாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மாநிலம் முழுவதும் புதிய தொழில்துறை மண்டலங்கள் விரைவாக அமைக்கப்படும் என்றும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட புதிய நகரம் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மின்வாகன உற்பத்தி, டிரோன் உற்பத்திக்கான தனி வழித்தடங்கள், விண்வெளித் துறை மற்றும் பசுமை ஹைட்ரஜன் சார்ந்த தொழில்கள் போன்ற புதிய துறைகளில் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கு உகந்த மாநிலமாக மாறி வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

Related News

Latest News