தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சிறப்பாகநடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் கட்சித் தலைவர் விஜய், நிர்வாகிகள், வேட்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழா தொடக்கத்தில், கட்சியின் கொள்கைத் தலைவர்களின் புகைப்படங்களுக்கு விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து உறுதிமொழி எடுக்கப்பட்டு, கட்சியின் கொள்கைப் பாடல் ஒலிபரப்பப்பட்டது.
முன்னதாக நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் முக்கிய அம்சங்களை மட்டுமே வெளியிட்டு வந்த விஜய், இப்போது 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முழுமையான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கை, கட்சியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் மக்களுக்கான வாக்குறுதிகளை விரிவாக விளக்குகிறது.
தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியை விவசாயி நாராயணனுக்கு விஜய் வழங்கினார். அதை பெற்றுக்கொண்ட நாராயணன், விஜய்க்கு நெற்கதிர் வழங்கி தனது நன்றியைத் தெரிவித்தார். தொடர்ந்து, சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அறிக்கையின் பிரதிகள் வழங்கப்பட்டன. இரண்டாவது பிரதியை ஆசிரியருக்கும், மூன்றாவது பிரதியை ஆட்டோ ஓட்டுநருக்கும் வழங்கினார்.
அதன்பின், நான்காவது பிரதியை அங்கன்வாடி பணியாளருக்கும், ஐந்தாவது பிரதியை ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கும் விஜய் வழங்கினார். மேலும், ஆறாவது பிரதியை மீனவருக்கும், ஏழாவது பிரதியை நெசவாளருக்கும் வழங்கினார்.
இந்த நடவடிக்கை, சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசியல் அணுகுமுறையை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
