த.வெ.க தேர்தல் அறிக்கை: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500… 10 அம்ச முக்கிய வாக்குறுதி…

“மக்களின் தேர்தல் அறிக்கை” என்ற பெயரில் தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு கட்சித் தலைவர் விஜய் சிறப்புரையாற்றினார். தனது உரையில் பொதுமக்கள் நலனை முன்னிறுத்திய பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

ஏழை பெண்களின் திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் தரமான பட்டுச் சேலை வழங்கப்படும் என அறிவித்தார். “அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்” திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் உலகத்தர சிகிச்சை பெறும் வகையில் ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என தெரிவித்தார்.

கல்வி துறையில், பள்ளி மாணவர்கள் இடைநின்றலை தடுக்கும் நோக்கில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். தமிழ்நாடு முழுவதும் 100 “காமராஜர் பள்ளிகள்” அமைக்கப்படும் என்றும் கூறினார்.

இளங்கலை முதல் ஆராய்ச்சி படிப்பு வரை மாணவர்களுக்கு பிணையில்லா கடன் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். வேலைவாய்ப்பு தொடர்பாக, டிப்ளமோ முடித்து வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2,500 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.4,000 நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும், தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு 75 சதவீத வேலைவாய்ப்பு வழங்கும் சட்டம் கொண்டு வரப்படும் என்றார்.

விவசாயிகளுக்கு 5 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்துள்ளவர்களின் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்களுக்கு 50 சதவீத கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் கூறினார். மீனவர்களுக்கு வீடு கட்டும் திட்டமும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டன.

Related News

Latest News