சென்னை ராமாபுரம் செந்தமிழ் நகர் பகுதியில் வசித்து வந்த 37 வயதான புஷ்பா, தனது கணவரை பிரிந்து கடந்த 10 ஆண்டுகளாக 16 வயது மகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். இவருக்கும் உறவினரான 40 வயது கார்த்தி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருந்தது.
நேற்று இரவு, வீட்டின் மாடியில் தூங்குவதற்காக புஷ்பா சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கு வந்த கார்த்தி, அவருடன் பேசிக் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இரவு சுமார் 11 மணியளவில் தாய் மற்றும் கார்த்தி பேசிக் கொண்டிருப்பதை மகள் பார்த்துள்ளார். அதன்பிறகு மகள் வீட்டிற்குள் சென்று தூங்கியுள்ளார்.
காலை நீண்ட நேரமாகியும் தாய் கீழே இறங்கி வராததால் சந்தேகம் அடைந்த மகள் மாடிக்கு சென்று பார்த்தபோது, புஷ்பா உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், புஷ்பாவின் உடலை கைப்பற்றி கே.கே. நகர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், சம்பவத்துக்குப் பிறகு காணாமல் போன கார்த்தியை தேடி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் இது கொலை சம்பவமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கார்த்தியை கைது செய்த பிறகே சம்பவத்தின் முழு விவரங்கள் தெளிவாகும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
