Monday, February 16, 2026

ஹரியானாவில் 5 குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழப்பு : தொற்று நோய் பரவலா என விசாரணை

ஹரியானா மாநிலத்தின் பல்வால் மாவட்டத்தில் உள்ள சாயன்சா பகுதியில் கடந்த 15 நாட்களில் ஐந்து குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகள் அசுத்தமான குடிநீர் மற்றும் தொற்று நோய் பரவல் காரணமாக ஏற்பட்டதா என்பது குறித்து சுகாதாரத் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஜனவரி மாத இறுதி முதல் பிப்ரவரி நடுப்பகுதி வரை பதிவான இந்த 12 உயிரிழப்புகள் கடுமையான கல்லீரல் பாதிப்புகளுடன் தொடர்புடையவை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட ஆய்வுகளின் படி, வைரஸ் ஹெபடைடிஸ் மற்றும் நீர் மாசுபாடு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

865 வீடுகள் கொண்ட சாயன்சா கிராமத்தில் சுமார் 5,700 பேர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் ஜனவரி 31ஆம் தேதி மஞ்சள் காமாலை தொடர்பான முதல் உயிரிழப்பு பதிவானது. அதனைத் தொடர்ந்து, கிராமத்தில் தொடர்ச்சியான மருத்துவ முகாம்கள், வீடு வீடாக கணக்கெடுப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஜனவரி 27 முதல் பிப்ரவரி 11 வரை சாயன்சாவில் ஏழு பேர் உயிரிழந்தனர். அவர்களில் நான்கு பேர் கடுமையான ஹெபடைடிஸ் மற்றும் கல்லீரல் செயலிழப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் வயது 9 முதல் 65 வரை உள்ளதாகும். பின்னர் உயிரிழந்தவர்களில் பலர் காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி மற்றும் மஞ்சள் காமாலை போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்வால் மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி சதீந்தர் வசிஷ்த் கூறுகையில், இந்த உயிரிழப்புகள் குறித்து விரிவான ஆய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை, உயிரிழந்தவர்களின் நெருங்கிய தொடர்புகள் உட்பட சுமார் 1,500 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். ஹெபடைடிஸ் ஏ, பி, சி மற்றும் ஈ வகைகள் குறித்து பரிசோதனைகள் செய்யப்பட்டன. 210 பேரின் ரத்தப் பரிசோதனையில் இரண்டு பேருக்கு ஹெபடைடிஸ் பி மற்றும் ஒன்பது பேருக்கு ஹெபடைடிஸ் சி இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், இதுவரை சேகரிக்கப்பட்ட 107 வீட்டு குடிநீர் மாதிரிகளில் 23 மாதிரிகளில் பாக்டீரியா மாசுபாடு மற்றும் போதுமான அளவு குளோரினேஷன் இல்லாதது தெரியவந்தது. மற்றொரு ஆய்வில் நீர் சேமிப்பு தொட்டிகளில் கோலிஃபார்ம் பாக்டீரியா இருப்பதும் கண்டறியப்பட்டது.

Related News

Latest News